கல்வி ஊக்கத்தொகையாக ரூ. 2.5 கோடி வழங்கும் நடிகர் சூர்யா

கரோனா முன்களப் பணியாளர்களின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்காக ரூ. 2.5 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக...
கல்வி ஊக்கத்தொகையாக ரூ. 2.5 கோடி வழங்கும் நடிகர் சூர்யா

கரோனா முன்களப் பணியாளர்களின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்காக ரூ. 2.5 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.

சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. குனீத் மோங்கா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தியில் லஞ்ச்பாக்ஸ், மாசான் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் 8 அன்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் இன்னமும் இயங்காமல் உள்ளதால், இயல்பு நிலைமை திரும்பிய பிறகு திரையரங்கில் வெளியாவதாக இருந்தது. 

ஆனால் தற்போதைய சூழலில், சூரரைப் போற்று படம், அக்டோபர் 30-ல் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று சூர்யா சமீபத்தில் அறிவித்தார். சூரரைப் போற்று வியாபாரம் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ. 5 கோடியை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்குவதாகவும் அவர் கூறினார். இதுகுறித்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது: பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் கரோனா யுத்தக் களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், சூரரைப் போற்று பட வெளியீட்டுத் தொகையில் இருந்து ரூ. 5 கோடி ரூபாயைப் பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளேன். உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

ரூ. 5 கோடியில் ரூ. 1.50 கோடியைத் திரையுலகச் சங்கங்களுக்கு அளித்துள்ளார் சூர்யா. பெப்சி அமைக்கு ரூ. 1 கோடி அளித்துள்ளார். இதிலிருந்து ரூ. 20 லட்சம் இயக்குநர்கள் சங்கத்துக்கு அளிக்கப்படும். ரூ. 30 லட்சத்தைத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் ரூ. 20 லட்சத்தை நடிகர் சங்கத்துக்கும் அளித்துள்ளார் சூர்யா.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் சேவையும் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறைப் பணியாளர்கள் மற்றும் கரோனா காலத்தில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மயானப் பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு  ரூ. 2.5 கோடி ஊக்கத்தொகை வழங்க சூர்யா முடிவு செய்துள்ளார். 

மேலும் 5 கோடியில் ரூ. 2.50 கோடியைத் திரைக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்கவும் சூர்யா தீர்மானித்துள்ளார். இதில் ரூ. 1.50 கோடியைத் திரையுலகச் சங்கங்களுக்கு அளித்த நிலையில் திரையுலக அமைப்புகளில் உறுப்பினர்களாக அல்லாத, திரையுலக விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள், திரையரங்கத் தொழிலாளர்கள் மற்றும் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்க முடிவு செய்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் சூர்யா. இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்கு ரூ. 10,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com