நேரில் சந்திக்க ரஜினி மறுத்தால், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம்: ‘தர்பார்’ விநியோகஸ்தர்கள் அறிவிப்பு

ரஜினி படத்தை ஒரு வாரத்திலோ 10 நாள்களிலோ திரையரங்கிலிருந்து எடுத்தால் அவருடைய இமேஜ் பாதிக்கும் என்பதால்...
நேரில் சந்திக்க ரஜினி மறுத்தால், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம்: ‘தர்பார்’ விநியோகஸ்தர்கள் அறிவிப்பு

தர்பார் பட விநியோகஸ்தர்களைச் சந்திக்க ரஜினி மறுத்தால், அடுத்தக் கட்டமாக வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என விநியோகஸ்தர்கள் சிலர் அறிவித்துள்ளார்கள்.

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு நாள்களில் தர்பார் படம் ரூ. 150 கோடி வசூலித்ததாக லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டது. 

ஆனால், தர்பார் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்டவில்லையென்பதால் ரஜினியிடம் நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளார்கள் விநியோகஸ்தர்கள். கடந்த வாரம், சென்னையிலுள்ள ரஜினியின் இல்லத்துக்கு நேரில் சென்று பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல இன்றும் தர்பார் படத்தை வட ஆற்காடு - தென் ஆற்காடு, திருநெல்வேலி, மதுரை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகிய இருவரையும் சந்திக்க முயன்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சென்னையில் ரஜினியின் இல்லம் அமைந்துள்ள சாலை வழியே செல்ல முயன்றபோது விநியோகஸ்தர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து விநியோகஸ்தர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

தர்பார் படத்தின் வட ஆற்காடு - தென் ஆற்காடு விநியோகஸ்தர் திருவேங்கடம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய விலை கொடுத்து தர்பார் படத்தின் விநியோக உரிமையை வாங்கினோம். சூப்பர் ஸ்டாரையும் முருகதாஸையும் நம்பித்தான் அதிக விலைக்கு நாங்கள் வாங்கினோம். ஏனெனில் ஆடியோ விழாவில் தர்பார் படம் பாட்ஷாவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று சொன்னார் ரஜினி சார். இதுவரைக்கும் இல்லாத வசூலைப் பார்க்கும் என்று சொன்னார் முருகதாஸ். இதுபோன்ற பல உத்தரவாதங்களைக் கேட்டு அதன் அடிப்படையில் அதிக விலைக்கு வாங்கினோம். தமிழ்நாட்டில் ரூ. 65 கோடிக்கு வாங்கினோம். இதில் ரூ. 25 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

ரஜினி சாரை இன்று பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றோம். மனுவை அவரது பி.ஏ. சுதாகரிடம் கொடுக்கச் சொன்னார்கள். முருகதாஸை நேரில் சந்திக்கச் சென்றால் அவரைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. 

லைகா நிறுவனத்திடம் முறையிட்டால், மொத்த பட்ஜெட்டில் 70 சதவிகிதத்தைச் சம்பளமாகவே இவர்களிடம் கொடுத்துவிட்டோம். எங்களுக்கு இழப்பு ஏற்பட்டது என்கிறார்கள். அதனால் தான் ரஜினி, முருகதாஸைச் சந்திக்க வந்தோம் என்றார்.

தர்பார் படத்தின் திருநெல்வேலி விநியோகஸ்தர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

படத்தை வாங்கிய ஒரே வாரத்தில் பாதிப்பு வந்தது. இது சூப்பர் ஸ்டார் படம். ஒரு வாரம் பொறுத்திருங்கள். வசூல் குறைவாக உள்ளது என எங்களுக்கே தெரிகிறது. நாங்கள் ரஜினி சாரிடம் பேசுகிறோம் என லைகாவிலிருந்து சொன்னார்கள். ரஜினி படத்தை ஒரு வாரத்திலோ 10 நாள்களிலோ திரையரங்கிலிருந்து எடுத்தால் அவருடைய இமேஜ் பாதிக்கும் என்பதால் கஷ்டத்தை இரு வாரங்களுக்கு நாங்கள் பொறுத்துக்கொண்டோம். ஆனால் லைகா நிறுவனம் பிறகு சொன்னது - எங்களால் இனி எதுவும் பேசமுடியாது. எங்களுக்கு ரூ. 70 கோடி நஷ்டம். ரஜினி சாருக்கும் முருகதாஸுக்கும் பெரிய சம்பளம் கொடுத்துவிட்டோம். இனி எதுவாக இருந்தாலும் ரஜினி சாரையோ முருகதாஸையோ பாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். 

லைகா அவ்வாறு சொன்னபிறகு ரஜினி சார் வீட்டுக்குப் போனோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. சரி என இன்று அவரைச் சந்திக்க மீண்டும் சென்றோம். எங்கள் உள்ளே அனுமதிக்க காவல்துறை விடவில்லை. அந்தச் சாலையிலேயே நிற்கச் சொல்லக்கூடாது என்றார்கள். பிறகு பத்திரிகையாளர்களிடம் பேச முற்பட்டபோது ஒருவரை மட்டும் அனுப்புங்கள் என்றார்கள். போனவரிடம், ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சுதாகர் இருப்பார். உங்கள் மனுவை அவரிடம் கொடுங்கள் என்று கூறியுள்ளார்கள். ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்தால், இந்த மனுவை வாங்க எனக்கு அனுமதி கிடையாது. நீங்கள் லைகாவைச் சென்று பாருங்கள் என்று சுதாகர் சொல்லிவிட்டார். இப்படி எங்களை அங்கேயும் இங்கேயும் போகச் சொன்னால் எப்படி? தர்பார் படத்தால் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களையே பார்க்க முடியாது என்றால் மற்றவர்களை எப்படிப் பார்ப்பீர்கள். இதற்குப் பிறகும் எங்களைச் சந்திக்க வாய்ப்பு கொடுக்காவிட்டால், அடுத்ததாக வள்ளுவர் கோட்டத்தில் விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருப்போம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இதுதான் நாங்கள் கடைசியாக எடுக்கிற முடிவு. 

ரஜினி சாரை நம்பித்தான் படத்தை வாங்கினோம். படம் நன்றாகப் போகும் என உத்தரவாதம் கொடுத்துத்தான் லைகா நிறுவனம் படத்தை விற்றது. எம்.ஜி. அடிப்படையில் படத்தை வாங்கினோம். நாங்கள் முதலில் லைகாவிடம் சென்றுதான் முறையிட்டோம். 9-வது நாளே சென்றோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் சேர்த்து ரூ. 25 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் வேறு எதுவும் கேட்கவில்லை. ரஜினி சாரை நேரில் சந்திக்க அனுமதி வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com