மதமாற்றமா? 'போயி வேற வேலை இருந்தா பாருங்கடா'- விஜய் சேதுபதி

மதமாற்றத்தில் ஈடுபட்டது போன்ற பதிவைச் சுட்டிக்காட்டி ''போயி வேற வேலை இருந்தா பாருங்கடா'' என்று நடிகர் விஜய் சேதுபதி தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை பதிவிட்டுள்ளார்.
மதமாற்றமா? 'போயி வேற வேலை இருந்தா பாருங்கடா'- விஜய் சேதுபதி

நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்படும் வருமானவரிச் சோதனைகளுக்கு மதமாற்றத்தில் ஈடுபட்டதுதான் காரணம் என்பது போன்ற பதிவைச் சுட்டிக்காட்டி ''போயி வேற வேலை இருந்தா பாருங்கடா'' என்று நடிகர் விஜய் சேதுபதி தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து ''கைது'' புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றனர். இதன் கடைசி கட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பிகில் படத்தில் ரூ.300 கோடி லாபம் என்ற தகவலால் வருமானவரி ஏய்ப்பு நடைபெற்றதாகக் கூறி சோதனை நடத்தப்பட்டது. தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.77 கோடி ரொக்கம், நகைகள் மற்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைவருக்கும் சம்மன் வழங்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெற்றதன் உண்மை காரணம் அவர் மதமாற்றத்தில் ஈடுபட்டது தான் என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வுருகிறது. அப்படியான ஒரு பதிவில், 

ஜேப்பியார் மகள் ரெஜினா, தமிழகத்தில் கிறிஸ்துவ மதமாற்றப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். எனவே திரைத்துறையிலும் கிறிஸ்துவத்தைப் பரப்பும் விதமாக விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோரை வடபழனியில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியதாகவும், இதர திரைத்துறையினரையும் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற அவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில என்ஜிஓ அமைப்புகள் பல்வேறு கல்விக் குழுமங்கள் மூலம் பணம் வழங்கி வந்த நிலையில், அதனை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ''போயி வேற வேலை இருந்தா பாருங்கடா'' என அந்தப் பதிவை சுட்டிக்காட்டி நடிகர் விஜய் சேதுபதி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com