தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய விதிகள்: பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி

தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று...
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய விதிகள்: பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி

தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குனர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. புதன்கிழமை இரவு அந்தத் திரைப்படத்துக்கான காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அங்கு உயரமான கிரேனில் அதிக ஒளியை உமிழும் மின்விளக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. இரவு 9.30 மணியளவில் இடைவேளையின்போது திடீரென கிரேன் சரிந்து விழுந்தது. அப்போது அருகே நின்றவா்கள் மீதும், திரைப்பட படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தின் மீதும் கிரேன் விழுந்தது. இந்த விபத்தில் அங்கிருந்த 13 போ் பலத்தக் காயமடைந்தனா். சிலா் கிரேனுக்கு அடியில் சிக்கினா். விபத்தை நேரில் பாா்த்த கமல் உள்ளிட்டோா் அதிா்ச்சியடைந்தனா். காயமடைந்த அனைவரும் வேகமாக மீட்கப்பட்டனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரம் சுந்தர்ராஜன் தெருவைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா (35), திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் எம்.ஜி.ஆா்.நகரைச் சோ்ந்த சொ.சந்திரன் (58), ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கண்ணகிரியைச் சோ்ந்த சி.மது (29) ஆகியோா் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

தமிழ்த் திரைப்பட சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, இந்தியன் 2 விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

படப்பிடிப்பின்போது தொழிலாளர்களின் பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும். 100, 200 அடி உயரங்களில் இருந்து காட்சிகளைப் படமாக்கும்போது அதற்குரிய முன்னேற்பாடுகள் தேவை. சினிமா துறையில் இல்லாத கிரேன்களைப் பிற இடங்களிலிருந்து கொண்டுவந்து படப்பிடிப்பில் பயன்படுத்துகிறார்கள். சினிமா துறையில் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கிரேனை இயக்குபவர்களுக்கும் புரிதல் ஏற்பட்ட பிறகே படப்பிடிப்பு தொடங்கப்படும். 

ஆங்கிலப் படங்களுக்கு இணையாகப் படங்களைத் தயாரிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல ஆங்கிலப் படங்களின் படப்பிடிப்புக்கு எந்த அளவிற்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ அந்த அளவுக்குத் தமிழ்ப் படங்களுக்கும் வழங்கவேண்டும். திரைப்படத்துறை சாராத உபகரணங்கள் பயன்படுத்தப்படும்போது சம்பந்தப்பட்ட சம்மேளனத்திடம் ஒப்புதல் பெறும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனிமேல் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்புத் தளங்களோடு ஒப்பந்தம் செய்யப்படும். படப்பிடிப்புத் தளங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com