இந்தியன் 2 விபத்து: லைகாவுக்கு கமல் கடிதம்

எந்தவொரு படப்பிடிப்பையும் தொடங்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று பரிசோதிக்க...
இந்தியன் 2 விபத்து: லைகாவுக்கு கமல் கடிதம்

படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யுமாறு லைகா நிறுவனத்துக்கு கமல் ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த புதன்கிழமை, படப்பிடிப்புத்தளத்தில் உயரமான கிரேனில் அதிக ஒளியை உமிழும் மின்விளக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. இரவு 9.30 மணியளவில் இடைவேளையின்போது திடீரென கிரேன் சரிந்து விழுந்தது. அப்போது அருகே நின்றவா்கள் மீதும், திரைப்பட படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தின் மீதும் கிரேன் விழுந்தது. இந்த விபத்தில் அங்கிருந்த 13 போ் பலத்தக் காயமடைந்தனா். சிலா் கிரேனுக்கு அடியில் சிக்கினா். விபத்தை நேரில் பாா்த்த கமல் உள்ளிட்டோா் அதிா்ச்சியடைந்தனா். காயமடைந்த அனைவரும் வேகமாக மீட்கப்பட்டனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரம் சுந்தர்ராஜன் தெருவைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் எம்.ஜி.ஆா்.நகரைச் சோ்ந்த சொ.சந்திரன், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கண்ணகிரியைச் சோ்ந்த சி.மது ஆகியோா் அடுத்தடுத்து உயிரிழந்தனா். கிருஷ்ணா உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தது திரைப்படத்துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த விபத்து குறித்து லைகாவுக்கு கமல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

மிகுந்த மனவேதனையுடன் நான் எழுதுகிறேன். பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற சம்பவங்களை இன்னமும் மறக்கமுடியவில்லை. 

நம்முடன் சிரித்துப் பேசி, பணியாற்றிய சிலர் இப்போது இல்லை. 

விபத்து நடந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள், நிகழ்ந்த கணத்திலிருந்து சில நொடிகள் தான் நான் தள்ளி இருந்தேன். மயிரிழையில் உயிர் தப்பினேன். என்னுடைய வேதனையை வார்த்தைகளில் வடிக்க முடியாது. படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இதுபோன்ற விபத்துகள் படப்பிடிப்புக் குழுவினரின் நம்பிக்கையைக் குலைக்கும். என்ன விபத்து ஏற்பட்டாலும் அதற்கான இழப்பீடு முழுமையாகவும் உடனடியாகவும் வழங்கப்படவேண்டும். 

காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சையும் அவர்களின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவையும் வழங்கவேண்டும். பண ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும். 

எந்தவொரு படப்பிடிப்பையும் தொடங்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று பரிசோதிக்க ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும். இதன்மூலம் நான் உள்பட படப்பிடிப்புக் குழுவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி படப்பிடிப்புக்குத் திரும்ப வழி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com