சினிமாவில் தன்னிறைவு அடைந்தபிறகு அரசியலுக்கு நிச்சயமாக வருவேன்: பார்த்திபன்

ரஜினி, கமலே இப்போதுதான் அரசியலுக்கு வந்து பெரிய போராட்டத்தில் உள்ளார்கள்.
சினிமாவில் தன்னிறைவு அடைந்தபிறகு அரசியலுக்கு நிச்சயமாக வருவேன்: பார்த்திபன்

திரைப்பட நடிகரும் இயக்குநருமான இரா.பார்த்திபன் எழுதிய கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பு மற்றும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தின் நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா கோவை புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள ஒடிசி புத்தகக் கடையில்  நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பார்த்திபன் பேசியதாவது: 

என்னை உயிர்ப்போடு வைத்திருப்பது சினிமா. அதற்குப் பிறகு தமிழ். தமிழின் பிரதிபலிப்பாக நான் எழுதிய நூல், கிறுக்கல்கள். வெளிவந்து 20 வருடங்களாகிவிட்டது. ஒரு சினிமா 30 வருடங்கள் கழித்தும் பேசப்படுவது எப்படி பெரிய விஷயமோ அதுபோல கிறுக்கல்கள் நூல் வெளியாகி 20 வருடங்களுக்குப் பிறகும் அதன் விழாவில் இவ்வளவு பேர் திரளாக வந்திருக்கிறீர்கள். இப்போதும் அது விற்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே புத்தகம் எழுதியவர்கள், அறிவுஜீவிகள் தான் இந்தப் புத்தகத்தை வாங்குகிறார்கள். 

என்னுடைய சமீபத்திய சந்தோஷம், ஒத்த செருப்பு.

சினிமா என்பது பெரிய போராட்டம். இந்தப் போராட்டங்களைக் கடந்துதான் ஒவ்வொரு படமும் வெளிவருகிறது. தெய்வ மகன் முதல் தேவர் மகன் வரை தேசிய விருதிற்குச் சென்ற நிலையில், என்னுடைய ஒத்த செருப்பிற்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காததால் தான், நானே 50 லட்சம் ரூபாய் செலவு செய்து ஆஸ்காருக்கு அனுப்பினேன். 

சராசரி பிரஜைகள் எல்லோருக்கும் அரசியல் ஈடுபாடுகள் இருக்கவேண்டும். சினிமாவில் தன்னிறைவு அடைந்தபிறகு அரசியலுக்கு நிச்சயமாக வருவேன். ரஜினி, கமலே இப்போதுதான் அரசியலுக்கு வந்து பெரிய போராட்டத்தில் உள்ளார்கள். நடுவில் நான் ஒரு போட்டியாக வரவேண்டாம் என எண்ணுகிறேன். அரசியலை வைத்து அரசியல் செய்வது இப்போது அதிகமாக இருக்கிறது. அதனால் புதிதாக ஒரு குழப்பத்தை நான் உண்டாக்கவேண்டாம் என நினைக்கிறேன். 

அடுத்து, சிங்கிள் ஷாட்டில் எடுக்கும் படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவேன். தமிழ் சினிமா, உலகு அரங்குக்குச் செல்லவேண்டும் என்கிற விருப்பம் உள்ளது. 

சிங்கிள் ஷாட்டில் இரவின் நிழல் படத்தை இயக்குகிறேன். விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெப் சீரிஸில் நடிக்கிறேன். 

ஒரு காலத்தில் 3 நாள் கூட சாப்பிடாமல் வேலை பார்த்தேன். சபரிமலைக்கு மாலை போட்டுவிட்டு, மலைக்குச் செல்லவும், சாப்பிடவும் கூட காசு இல்லாமல் 75 நாள்கள் விரதம் இருந்து, அதன் பின் சென்றேன். சினிமா மூலமாக சில விஷயங்களைக் கூறுவது என்பது சாத்தியமல்ல. படம் என்பது தகவல் சொல்வது மட்டுமல்ல, வலியைக் கூறும் களம் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com