விஜய்யின் மாஸ்டர் படம் கொரியப் படத்தின் தழுவலா?

மாஸ்டர் படம் சைலன்ஸ்டு என்கிற கொரியப் படத்தின் தழுவலாக இருக்கிற வாய்ப்பு உள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்துள்ளது.
விஜய்யின் மாஸ்டர் படம் கொரியப் படத்தின் தழுவலா?

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தில்லியிலும் சென்னை பூந்தமல்லியில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முதலில் நடைபெற்றன. பிறகு கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலைகளில் நடைபெற்றது. 

இந்நிலையில் மாஸ்டர் படம் சைலன்ஸ்டு என்கிற கொரியப் படத்தின் தழுவலாக இருக்கிற வாய்ப்பு உள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்துள்ளது. 2011-ல் வெளியான சைலன்ஸ்டு படத்தில் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் கதாநாயகன் பணிபுரிகிறான். புதிதாக வேலைக்குச் சேர்ந்த கதாநாயகனிடம் பேசுவதற்கு மாணவர்கள் தயங்குகிறார்கள். இதற்கான காரணத்தை விசாரிக்கிறான். பிறகுதான் பள்ளி ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு மாணவர்கள் ஆளானது தெரிய வருகிறது. இந்தச் சிக்கலில் சிக்கியுள்ள மாணவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கிறான். மாணவர்களைத் துன்புறுத்திய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களைக் கதாநாயகன் தண்டிப்பது போல அப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

விஜய் நடித்து வரும் மாஸ்டர் படமும் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் படமாக்கப்பட்டதால் கொரியப் படத்தின் தழுவலாக இருக்குமோ என்கிற சந்தேகத்தைப் பலரும் தெரிவித்துள்ளார்கள். எனினும் மாஸ்டர் படக்குழு இதை மறுத்துள்ளது. இது, லோகேஷ் கனகராஜின் கதை. சைலன்ஸ்டு படத்துக்கும் மாஸ்டருக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com