என்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்காகத் தொடங்கப்பட்டதுதான் அகரம் அறக்கட்டளை: சூர்யா பேச்சு

அகரம் அறக்கட்டளை கடந்த 10 ஆண்டுகளில் 3,000 மாணவா்களை படிக்க வைத்திருக்கிறது.
என்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்காகத் தொடங்கப்பட்டதுதான் அகரம் அறக்கட்டளை: சூர்யா பேச்சு

சென்னையில் பேராசிரியா் ச. மாடசாமி எழுதிய ‘வித்தியாசம்தான் அழகு’ மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவா்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான ’உலகம் பிறந்தது நமக்காக’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகரம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டாா். 

இந்த விழாவில் அகரம் அறக்கட்டளை மூலம் பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவர் மிகவும் நெகிழும் விதத்தில் தன்னுடைய வாழ்க்கை குறித்தும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை உதவியது குறித்தும் பேசினார். இந்தப் பேச்சைக் கேட்ட சூர்யா மேடையிலேயே கண் கலங்கினார்.  பிறகு மாணவிக்குத் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார்.

இந்த விழாவில் சூர்யா பேசியதாவது:

அகரம் அறக்கட்டளை கடந்த 10 ஆண்டுகளில் 3,000 மாணவா்களை படிக்க வைத்திருக்கிறது. மேலும், முன்னாள் அரசு பள்ளி மாணவா்களை இணைத்து அவா்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அகரம் அறக்கட்டளை ‘இணை’ எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த முயற்சிக்கு அரசு பள்ளி சாா்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று கூறிய அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நன்றி.

பள்ளிக் காலங்களில் நன்றாகப் படிக்காததால் வீட்டுக்கு வருபவர்கள் படிப்பைப் பற்றி கேட்பார்களே என கூச்சத்துடன் ஒதுங்கி நின்றுள்ளேன். எனக்குப் பல வசதிகள் கிடைத்தும் கல்வி மற்றும் இதர விஷயங்களில் நான் பின்தங்கியுள்ளேன். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறேன் எனத் தெரியாமல் இருந்துள்ளேன். அப்பாவின் பெயரை எப்படிக் காப்பாற்றப் போகிறேன் என்கிற பயம் இருந்தது. நான் எதற்கு லாயக்கு, பிரயோஜனமாக இருந்து மற்றவர்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்கிற பயம் இருந்தது. நடிகனுக்கான எந்தத் தகுதியும் இல்லாமல் நடிகனானேன். தகுதி இல்லாத என்னை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அப்படி என்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்குத் திருப்பி உதவி செய்யவேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டது தான் அகரம் அறக்கட்டளை. 

அகரம் பத்தாண்டுகளில் 3000 மாணவர்களை படிக்க வைத்திருக்கிறது. இதன் பின்னணியில் எண்ணற்ற தன்னார்வலர்களின் உழைப்பு இருக்கிறது. எண்ணற்ற நன்கொடையாளர்களின் பங்கேற்பு இருக்கிறது. சமூக அக்கறையுடன் கல்வி வாய்ப்பு அளித்த கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த ஒரு தன்னார்வ அறக்கட்டளைக்கும் எந்த வித தோய்வுமின்றி சீராக நடைபெற நிதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அகரம் அறக்கட்டளைக்கு இன்று ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்த ராம்ராஜ் காட்டன் திரு. நாகராஜ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

எந்த ஒரு சூழ்நிலையையும் புரிந்து கொள்வதற்கும், சிறப்பாக செயல்படுவதற்கும் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. அகரம் மூலம் என் தம்பி தங்கைகளுக்கு கல்வியுதவி அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com