எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!: ‘வாரணம் ஆயிரம்’ வழியைத் தேர்வு செய்த நடிகர் விஷ்ணு விஷால்!

இரண்டரை மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்ததால் 11 கிலோ எடை ஏறியது. சூழ்நிலைக் கைதியாக உணர்ந்தேன்...
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!: ‘வாரணம் ஆயிரம்’ வழியைத் தேர்வு செய்த நடிகர் விஷ்ணு விஷால்!

கடந்த இரண்டரை வருடங்களாகச் சொந்த வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்து ட்விட்டரில் பதிவு எழுதியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். நான் தேர்ந்தெடுத்த வாரணம் ஆயிரம் வழி என்று தலைப்பிட்டு அவர் எழுதியதாவது:

கடந்த இரண்டரை வருடங்களும் எனக்கு மிகவும் கடினமாக அமைந்தன. பல கடினமான இரவுகளும் நாள்களும். இப்போது நான் வெளிப்படையாகப் பேசலாம் என நினைக்கிறேன்.

ஒருகட்டத்தில் என்னுடைய திரைத்துறை வாழ்க்கை நன்றாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை கீழே சென்றது. 11 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு 2017-ல் நானும் என் மனைவியும் பிரிந்தோம். இருவரும் தனித்தனி வீடுகளில் வாழ்ந்தது மட்டுமல்லாமல் என் மகனைப் பிரியவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. நான் நொறுங்கிப் போனேன். என் வாழ்க்கை இப்படி மாறும் என நினைக்கவேயில்லை. மதுவிடம் என்னை ஒப்படைத்தேன். ஒவ்வொரு இரவும் நான் அழும்வரை குடிப்பேன். இதனால் எனக்கு நாள்கள் மோசமாக அமைந்தன. அழுத்தமும் தூக்கமின்மையும் உடல் ரீதியாக என்னைத் தாக்கின. சிறிய அறுவை சிகிச்சையும் செய்துகொண்டேன்.

திரைத்துறைக்கான அழுத்தங்கள் அதிகமாகின. பொருத்தமில்லாத தேதியில் என் படம் வெளியானது. நான் அப்போதுதான் ஆரம்பித்த என் தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தது. தொடர்ந்து ஏற்பட்ட பணப் பிரச்னைகளால் என் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்டு 21 நாள்கள் படப்பிடிப்பு நடந்த படத்தைக் கைவிட நேர்ந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் படத்தில் நடித்தபோது பலமான காயம் ஏற்பட்டது. இரண்டரை மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்ததால் 11 கிலோ எடை ஏறியது. சூழ்நிலைக் கைதியாக உணர்ந்தேன். எதுவுமே எனக்குச் சரியாக அமையவில்லை. ராட்சசன் வெற்றிக்குப் பிறகும் அருமையான இயக்குநர்களுடனான 8 படங்கள் என் கையை விட்டுச் சென்றன. அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளால் தரை மட்டத்துக்குச் சென்றதுபோல உணர்ந்தேன். 

என் சொந்த உலகத்துக்குள்ளேயே மாட்டிக்கொண்டதால் என் தந்தை ஓய்வு பெற்றத்தையும் கவனிக்க மறந்தேன். என் வலி என் குடும்பத்தை முக்கியமாக என் அப்பாவைப் பாதித்தது என்பதைக் கவனிக்க மறந்தேன். வழியில்லாதவனாக என்னை உணர்ந்தபோது என்னுடைய வாழ்க்கையை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்தேன். 

மன அழுத்தத்துக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தொழில்முறைப் பயிற்சியாளரின் மூலம் உடற்பயிற்சிகளை ஆரம்பித்தேன். சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது, குறைவான மதுப்பழக்கம். யோகா பயிற்சி, அடுத்தவர்களை மதிப்பீடு செய்பவர்களை என் வாழ்க்கையிலிருந்து நீக்குவது, எதிர்மறை மனிதர்களைச் சமூகவலைத்தளங்களில் பிளாக் செய்வது, குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் அதிக நேரம் செலவிடுவது... என மாறினேன். என் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 

காயத்துக்குப் பிறகு அடுத்த ஆறு மாதங்களுக்கு உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டேன். ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். முதல் நாளில் ஒரு புஷ் அப் கூட என்னால் செய்ய முடியவில்லை. ஆனால் 6 மாதங்கள் கழித்து, 16 கிலோ குறைந்துள்ளேன். வலுவான மனிதனாக மாறியுள்ளேன். என்னுடைய அடுத்தப் படமான எஃப்.ஐ.ஆர்-ரில் நடிக்க ஆரம்பித்துள்ளேன். மேலும் நான்குப் படங்கள் கையில் உள்ளன. 

என்னைப் போல பிரச்னைகளைச் சந்தித்தவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது - எப்போதும் நீங்கள் மீண்டு வரலாம். நேர்மறை எண்ணங்களோடு கட்டுப்பாடுடன் இருங்கள். நல்ல உடல் நலம், நம் மன நலத்தை முன்னேற்றும். இதை நான் உணர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com