ராதாரவியை எதிர்த்து டப்பிங் சங்கத் தேர்தலில் பாடகி சின்மயி போட்டி!

ராதாரவியை எதிர்த்து டப்பிங் சங்கத் தேர்தலில் பாடகி சின்மயி போட்டி!

டப்பிங் சங்கத் தேர்தலில் நடிகர் ராதாரவியை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடவுள்ளார்.

டப்பிங் சங்கத் தேர்தலில் நடிகர் ராதாரவியை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடவுள்ளார்.

திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக, திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, சமூக ஊடகங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்தார். இதன் காரணமாக, சங்க விதிகளை மீறி சின்மயி செயல்பட்டதாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த 2018-இல் அவர் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை 2-ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் சின்மயி வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து சங்கத்துக்கான நுழைவுக் கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் உள்ளிட்டவற்றை சின்மயி செலுத்தி உள்ளார். மேலும், 2018-ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் உறுப்பினர் பட்டியலில் அவரது பெயர் உள்ளது என ஆதாரங்களுடன் வாதிட்டார் சின்மயி. இதையடுத்து, பாடகி சின்மயியை, டப்பிங் கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, சென்னை 2-ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல், பிப்ரவரி 15 அன்று நடைபெறுகிறது. இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடவுள்ளார்.

டப்பிங் சங்கத் தேர்தலில் சின்மயி போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: டப்பிங் சங்கத்தில் உறுப்பினராகும் அத்தனை உரிமைகளும் எனக்கு உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் என் பெயரை வேண்டுமென்றே நீக்கியிருந்தார்கள். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். என் பெயர் இல்லாததைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். டப்பிங் கலைஞர்களிடம் இருந்து வாங்கிய பணத்தைக் கொண்டே டப்பிங் கலைஞர்களுக்கு எதிராக வழக்கு தொடர்கிறார்கள். அதனால் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com