தொடர்ந்து குரல் எழுப்புவோம்: ஜெயராஜ், பென்னிக்ஸுக்காகப் பதறிய பாலிவுட் பிரபலங்கள்!

ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தொடர்ந்து குரல் எழுப்புவோம்: ஜெயராஜ், பென்னிக்ஸுக்காகப் பதறிய பாலிவுட் பிரபலங்கள்!

ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்லிடப்பேசி கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரை கடந்த 19-ஆம் தேதி பொதுமுடக்கத்தை மீறியதாக போலீஸார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் பலத்தக் காயங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 20-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு மிகவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பென்னிக்ஸ் 21-ஆம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் பென்னிக்ஸ், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதேபோல ஜெயராஜ், 22- ஆம் தேதி  உயிரிழந்தார். இது குறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார், கிளைச் சிறைக் கண்காணிப்பாளர் சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் தனித்தனியாக இரு வழக்குகளைப் பதிவு செய்தனர். 

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இச் சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக துறைரீதியாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகள், சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு, பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணை செய்தது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் இறந்த வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் திங்கள்கிழமை இரவு அரசாணை வெளியிட்டார்.

சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாள்களாக #JusticeForJeyarajAndFenix #JusticeForJayarajAndBennicks ஆகிய இரு ஹேஷ்டேக்-களும் டிரெண்ட் ஆகிவருகின்றன. ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக திரைப்படத்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

பாலிவுட் பிரபலங்கள் வெளிப்படுத்திய கண்டனங்கள்:

நடிகை பிரியங்கா சோப்ரா

நான் கேட்டதை வைத்து அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளேன். அவர்கள் எந்தத் தவறு செய்திருந்தாலும் இந்தக் குரூரத்தை எந்த மனிதராலும் எதிர்கொள்ள முடியாது. இந்தத் தவறைச் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கக் கூடாது. ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு நீதி கிடைக்க நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

நடிகை கரீனா கபூர்

என்ன காரணமாக இருந்தாலும் இதுபோன்ற கொடூரச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நியாயம் கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும். இச்செயல் மீண்டும் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும். 

நடிகை தாப்சி

கிடைத்துள்ள தகவல்கள் பயமுறுத்துகின்றன. நமக்குத் தெரிந்தவர்கள் யாருக்கும் இது நேரலாம். 

நடிகர் ரிதேஷ் தேஷ்முக்

இதைப் பற்றி படிக்கும்போது என் முதுகுத்தண்டு நடுங்கிப் போனது. காட்டுமிராண்டித்தனமான இந்தக் கொடூரச் செயலுக்கு எதிராக அனைவரும் குரல்  எழுப்பவேண்டும். 

நடிகை ஜெனிலியா

மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளேன். நாம் இப்படிப்பட்ட மோசமான இனமாக எப்படி மாறினோம்? கொடூரமான இந்தச் செயல் என் இதயத்தைப் பிளக்கிறது என்றார். 

நடிகை நேஹா துபியா

கரோனா அச்சுறுத்தல் நிலவும் இச்சமயத்தில் காவலர்களால் துன்புறுத்தப்பட்டு மரணமா? அக்காவலர்களை இடை நீக்கம் செய்தால் மட்டும் போதுமா? இந்தக் கொடூரச் செயலால் நாம் சீற்றமடைந்துள்ளோம்.

நடிகை தமன்னா

திகைத்துப் போயிருக்கிறேன். அவமானமாகவும் உள்ளது. இதுபோன்ற கடினமான சூழலில் மனித இனம் எப்படி மிருகத்தனமாக மாறியது? மனிதத்தன்மைக்கே இது எதிரானது. இதற்கான நியாயம் நிச்சயம் கிடைக்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் நிலவும் கொடூரச் செயல் நிறுத்தப்பட வேண்டும். 

நடிகர் விர் தாஸ்

தந்தை, மகனுக்கு காவலர்களிடம் ஏற்பட்ட கொடூரம் எல்லா விதத்திலும் தவறானது. அரசியல் நம்பிக்கை என எந்தப் பாகுபாடும் இன்றி இவர்களின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும். இந்தக் கொடூரச் செயல் தவறானது. நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார். 

இவர்கள் மட்டுமல்லாமல் நடிகைகள் ஆலியா பட், காஜல் அகர்வால், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com