சிறுமி படுகொலை: பிரபல தமிழ் நடிகைகள் ஆவேசம்!

பாலியல் வன்கொடுமையை முதல்முறையாகச் செய்தாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்.
சிறுமி படுகொலை: பிரபல தமிழ் நடிகைகள் ஆவேசம்!

புதுக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழ் நடிகைகள் தங்களுடைய வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே ஆவுடையாா்கோவில் வட்டம், ஏம்பல் மேக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தம்பதியின் 7 வயது சிறுமி புதன்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள ஊருணியில் இருந்து உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து, சடலத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ராஜா என்பவரை விசாரித்துவந்தனா். இதில், அவா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து குளத்தில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிந்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழ் நடிகைகள் தங்களுடைய வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். ட்விட்டரில் அவர்கள் கூறியதாவது:

வரலட்சுமி சரத்குமார்

மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதான் நாம் வாழும் உலகம் என்றால் கரோனாவால் சாவதில் தவறில்லை. அதுதான் கடவுளின் எதிர்வினையாகும். நாம் வாழத் தகுதியற்றவர்கள்.

(விடியோவில் கூறியதாவது) ஏழு வயது சிறுமியைப் பாலியல் கொடுமை செய்து கொன்றிருக்கிறார்கள். நம்முடைய நீதி என்ன செய்கிறது? கைது செய்கிறார்கள். ஆனால் ஒன்றும் நடப்பதில்லை. பாலியல் வன்கொடுமையை முதல்முறையாகச் செய்தாலும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன். அந்தப் பயம் இருந்தால் தான் குற்றத்தை நிறுத்துவார்கள். நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். 

ஹன்சிகா

மற்றொரு நாள், மற்றொரு இதயத்தை உடைக்கும் செய்தி, மற்றொரு வன்முறை, மற்றொரு பாலியல் வன்கொடுமை, மற்றொரு பாதிக்கப்பட்டவர்...

சாய் பல்லவி

மனித இனத்தின் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் மோசமான நிலையை நோக்கிச் செல்கிறது. குரலற்றவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். பலவீனமாக உள்ளவர்களைக் காயப்படுத்துகிறோம். நம்முடைய சுகத்துக்காகக் குழந்தைகளைக் கொல்கிறோம். ஏராளமான குற்றங்கள் நடப்பதால் அதில் ஒன்றைத் தெரியப்படுத்த ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டோம். 

ராதிகா சரத்குமார்

அந்தச் சிறுமிக்கு நடைபெற்ற கொடுமையைப் படிக்கும்போது என் இதயம் நொறுங்குகிறது. கண்ணீர் சிந்தாமல் ஒரு வரி கூட எழுத வலிமை இல்லை. குற்றவாளிகளை விடக்கூடாது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து வேதனையடைந்துள்ளேன். இந்தச் செய்தி என்னைப் பிளந்துவிட்டது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைத் தடுக்க நாம் தீர்வு கண்டுபிடித்தாக வேண்டும். குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்.

அதுல்யா

வலியை ஏற்படுத்தும் இன்னொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. இதுபோன்ற மனிதர்கள் மாறவே மாட்டார்கள். சமூகவலைத்தளங்களில் அழுவதால் பயனில்லை. கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இன்று இந்தச் சிறுமி, நாளை இன்னொரு சிறுமிக்கு இக்கொடுமை நேரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com