எங்களைக் கோடீஸ்வரர்களாக்கிவிட்டு அதில் பங்கு கேட்காதவர்: கே. பாலசந்தருக்கு கமல் புகழாரம்

இன்று எத்தனை நடிகர்களுக்கு அவரைப் போன்ற ஒரு வழிகாட்டி கிடைப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தால்...
எங்களைக் கோடீஸ்வரர்களாக்கிவிட்டு அதில் பங்கு கேட்காதவர்: கே. பாலசந்தருக்கு கமல் புகழாரம்

கே. பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் கமல் ஹாசன். 

கவிதாலயா நிறுவனம், யூடியூபில் கமல் ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களின் கருத்துகளை விடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் கமல் கூறியிருப்பதாவது:

அய்யா கேபி, நாங்கள் அப்படித்தான் அவரை அழைப்போம். வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பட்டங்களில் அவர் அழைக்கப்பட்டாலும் எங்களுக்கு கே.பி. தான். முதல்முதலில் வாஹிணி படப்பிடிப்புத்தளத்தில் ஜெமினி மாமா என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். வெள்ளி விழா படத்தின் படப்பிடிப்பு என நினைக்கிறேன். அப்போது மிகவும் பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்தவர், சற்று நின்று என்னைக் கவனித்தார். அந்தக் கவனிப்பு, பிறகு இவ்வளவு பெரிய உறவாக வலுக்கும் என்று கனவு கூட காணவில்லை. 

அதற்குப் பிறகு 16, 17 வயதில் அவரிடம் வந்து சேர்ந்தேன். அவர் வாழ்வில் எனக்குக் கொடுத்த இடமும் என் வாழ்வில் அவருக்குக் கொடுத்த இடமும் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று. இயற்கையாக நிகழ்ந்த ஒன்று. அது அப்பா - மகன் உறவாகவே மாறிவிட்டது. வீட்டில் ஒரு பிள்ளையாக அவர்கள் என்னை நினைக்கத் தொடங்கி பல வருடங்களாகி விட்டன. என்னிடம் நிறைய பேசி இருக்கிறார். அறிவுரை சொல்வதற்காகவும் வசனம் சொல்லிக் கொடுப்பதற்காகவும். என்னை நல்வழிப்படுத்துவதற்காக ஏசியும் இருக்கிறார். நாங்கள் பேசிக்கொண்ட உரையாடல்களில் என் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துப் பதிவு செய்து பார்த்தால், மூன்று ஃபுல்ஸ்கேப் தாள்களுக்குள் அடங்கிவிடும். என் வாழ்க்கையில் செய்த பெரிய கெட்டிக்காரத்தனம். அவருடன் கலந்து உரையாடாமல் சொல்வதை எல்லாம் தெளிவாகக் கேட்டுக்கொண்டதால் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையப் பெற்றது என்று சொல்லலாம்.

இப்போது அவர் இருந்திருந்தால் 90-வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லியிருந்தால், அவரிடம் சென்று அனுமதி கேட்டிருப்போம். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதை விளக்கி, பட்டியல் போட்டுக் கொடுத்துவிடுவார்.

என் வெகுநாள் ஆசை, என் கதையில் அவர் நடிக்க வேண்டும் என்று. அதை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டுத்தான் போனார். எதையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்ப்பார். ரசிகனாகப் பார்ப்பார். எப்படி உனக்குத் தோன்றியது என்பார். கடைசிக் காலங்களில் மேடைகளில் பேசும்போது அவருக்குக் குழப்பம் வந்தது. என்னை ஒருமையில் பேசுவதா இல்லை அவர் இவர் என்று பேசுவதா என. அவருக்கு நான் என்றும் அந்தப் பையன் தான். இன்று எத்தனை நடிகர்களுக்கு அவரைப் போன்ற ஒரு வழிகாட்டி கிடைப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தால் எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தின் மகிமை, வரம் இன்று எனக்குப் புரிகிறது. என்னைப் போன்றவர்கள் இருக்கும் வரை, எங்கள் புகழ் வாழும் வரை அவர் புகழும் வாழும்.

இன்றைக்கெல்லாம் ஒரு என்ஜினியர், மருத்துவர் ஆகவேண்டுமென்றால் ஃபீஸ் கட்டி வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. எங்களையெல்லாம் கோடீஸ்வரர்களாக்கிவிட்டு அதைப் பார்த்துக் கொஞ்சம் கூட என் பங்கு என்ன என்று கேட்காமல் சிரித்துக்கொண்டிருந்த அவரைப் போன்ற குருக்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com