சீனாவின் சில நகரங்களில் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள்: ரசிகர்கள் உற்சாகம்!

எனினும் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படவில்லை.
படம் - https://twitter.com/PDChina
படம் - https://twitter.com/PDChina

சீனாவில் கடந்த ஜனவரியில் மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்து விட்டார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 11 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தொடங்கினாலும் மார்ச் முதல் குறைவான பாதிப்பே அங்கு உள்ளது. இதனால் சீனாவின் ஷாங்காய் உள்ளிட்ட சில நகரங்களில் ஜனவரி மாதத்துக்குப் பிறகு தற்போது திரையரங்குகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சீனாவில் 600 திரையரங்குகளைச் சொந்தமாகக் கொண்டுள்ள வாண்டா ஃபிலிம், 40 திரையரங்குகளை மீண்டும் திறந்துள்ளது. அவற்றில் ஷாங்காயில் மட்டும் 10 திரையரங்குகள் தற்போது இயங்கத் தொடங்கியுள்ளன. 

திரையரங்குகள் மீண்டும் இயங்கி வரும் நிலையில் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு இருக்கை விட்டு மற்றொரு இருக்கையில் தான் ரசிகர்கள் அமரவேண்டும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முகக்கவசம் அணிந்துதான் ரசிகர்கள் திரையரங்கினில் நுழைய முடியும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் ரசிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

சீனப் படங்களான ஏ ஃபர்ஸ்ட் ஃபேர்வெல் மற்றும் ஷீப் வித்தவுட் ஏ ஷெப்பேர்ட், 2017 பிக்ஸார் படமான கோகோ ஆகிய படங்களுக்கு நல்ல கூட்டம் வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிக வசூலைப் பெறும் நாடு சீனா. கடந்த வருடம் திரையரங்குகளின் மூலமாக ரூ 67,268 கோடிக்கு (9 பில்லியன் டாலர்கள்) வசூல் கிடைத்துள்ளது

எனினும் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படவில்லை. அங்கு, கடந்த மாதம் கரோனா பாதிப்பு மீண்டும் தொடங்கியதால் பாதுகாப்பு கருதி அங்குள்ள திரையரங்குகளை இயக்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com