பண மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு

பண மோசடி வழக்கு விசாரணைக்காக திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும்...
பண மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு

சென்னை, ஜூலை 23:  பண மோசடி வழக்கு விசாரணைக்காக திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி நிறுவனம் தொடங்குவதாக கூறி துளசி மணிகண்டன் என்பவரிடம் ரூ. 300 கோடி மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் பண மோசடியில் பிரபல திரைப்படத் தயாரிப்ப்பாளர் ஞானவேல் ராஜாவுக்குத் தொடர்பு உள்ளது காவல்துறையினருக்குத் தெரிய வந்தது.

இதனையடுத்து, ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் கடந்த ஜூலை 24 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஞானவேல் ராஜாவுக்கு சம்மன் அனுப்பினர். இந்த நிலையில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறையும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் அல்லது காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை  நீதிபதி ஜி.கே. இளந்திரையன் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது இந்த மோசடியில் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை, போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் கூட தன்னுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை என ஞானவேல் ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 3 கோடி ரூபாய் மோசடியைக் காவல்துறையினர் 300 கோடி என தவறாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது போலீஸார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து ஞானவேல் ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த மோசடி வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஞானவேல் ராஜா நேரில் ஆஜராக வேண்டும், நேரில் ஆஜராகத் தவறினால் அவர் மீது காவல்துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com