கரோனாவால் அவதார் 2 வெளியீடு தள்ளிவைப்பு!

கரோனாவுக்கு முன்பு டிசம்பர் 2021-ல் படத்தை வெளியிடத் தயாராக இருந்தோம். ஆனால்...
கரோனாவால் அவதார் 2 வெளியீடு தள்ளிவைப்பு!

கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பைச் சரியாக நடத்த முடியாத காரணத்தால் அவதார் 2 படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு வெளிவந்த படம் அவதார். ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், உலகளவில் 2.78 பில்லியன் டாலர் (ரூ. 19,282 கோடி) வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனை செய்தது.

அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் 2016-ல் அறிவித்தார். நான் காணும் கலை என்பது, துல்லியமான கற்பனை உலகம். முதல் பாகத்தை விடவும் சிறப்பாக அமையும். மிகச்சிறந்த காவியமாக உருவாகும். 3டி படமாக உருவாக்கப்படும் அவதார் 2 மற்றும் அதன் இதர பாகங்களை 3டி கண்ணாடியின்றிப் பார்க்கமுடியும் என்று கூறினார். டெர்மினேட்டர் படத்தின் இரு பாகங்கள், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற படங்கள் மூலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்த ஜேம்ஸ் கேம்ரூன், 3டி கண்ணாடியின்றி 3டி படம் பார்க்கமுடியும் என்று அறிவித்தது திரையுலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அவதார் 2 படத்தின் படப்பிடிப்பை 2017-ம் வருடம் செப்டம்பர் மாதம் ஆரம்பித்தார் ஜேம்ஸ் கேம்ரூன். சேம் வொர்திங்டன், ஸோ சல்டானா, வீவர் போன்றோர் இப்படங்களில் நடிக்கிறார்கள்.

அவதார் படத்தின் 2-ம் பாகம், 2020, டிசம்பர் 18 அன்றும் அடுத்த மூன்று பாகங்கள் டிசம்பர் 17, 2021, டிசம்பர் 20, 2024, டிசம்பர் 19, 2025 ஆகிய நாள்களிலும் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு புதிய வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டன. 

அவதார் 2 படம் டிசம்பர் 17, 2021 அன்று வெளியாகும் எனக் கடந்த வருடம் மே மாதம், டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதேபோல அவதார் 3,  அவதார் 4, அவதார் 5 படங்களும் 2023, 2025, 2027 ஆகிய வருடங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அவதார் 2 படத்தின் வெளியீட்டுத் தேதியில் மேலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஜேம்ஸ் கேம்ரூன் கூறியுள்ளதாவது:

கரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பைக் குறித்த நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது, நியூசிலாந்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். கரோனாவுக்கு முன்பு டிசம்பர் 2021-ல் படத்தை வெளியிடத் தயாராக இருந்தோம். ஆனால் தற்போதைய தாமதங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். 

இதையடுத்து அவதாரின் அடுத்தப் பாகங்களின் புதிய வெளியீட்டுத் தேதிகள்:

அவதார் 2 - டிசம்பர் 16, 2022
அவதார் 3 - டிசம்பர் 20, 2024
அவதார் 4 - டிசம்பர் 18, 2026
அவதார் 5 - டிசம்பர் 22, 2028

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com