பிக் பாஸைத் தடை செய்யலாமா வேண்டாமா?: ரசிகர்களிடம் நடிகை ஓவியா திடீர் கேள்வி

அந்தப் போட்டி இல்லாமல் உங்களுக்குப் புகழ் வந்திருக்காது என்கிற ஒரு கேள்விக்கு...
பிக் பாஸைத் தடை செய்யலாமா வேண்டாமா?: ரசிகர்களிடம் நடிகை ஓவியா திடீர் கேள்வி

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தடை செய்யலாமா வேண்டாமா என ரசிகர்களிடம் நடிகை ஓவியா கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் டி.வி.யில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் நடிகர் கமல் ஹாசன். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் 2-வது சீஸனை நடிகை ரித்விகாவும் கடந்த வருட போட்டியை முகெனும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

பிக் பாஸ் முதல் சீஸனில் பங்கேற்ற நடிகை ஓவியா, போட்டியை வெல்லாவிட்டாலும் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தார். அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் சமூகவலைத்தளங்களில் பிரபலமாகின. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சக போட்டியாளரான நடிகர் ஆரவ்வை நடிகை ஓவியா காதலித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இதனால் மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டார் ஓவியா. இதையடுத்து அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமாக அமைந்தன. மீண்டும் மீண்டும் ஆரவ்விடம் சென்று ஐ லவ் யூ எனக் கூறினார். ஆனால் ஆரவ் தொடர்ந்து ஓவியாவின் காதலை ஏற்க மறுக்கவே, திடீரென அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்தார். இதனால் இதர போட்டியாளர்கள் மிகவும் பரபரப்பு அடைந்து, அவரை நீச்சல் குளத்திலிருந்து மேலே கொண்டுவந்தார்கள். இதையடுத்து மனநல மருத்துவரை அழைத்து ஓவியாவைப் பரிசோதிக்கும்படி போட்டியாளர்கள் பிக் பாஸ் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். மனநல மருத்துவர் பிக் பாஸ் அரங்குக்குள் நுழைந்து ஓவியாவைப் பரிசோதித்தார். காதல் தோல்வியால் போட்டியை விட்டு வெளியேறினார் ஓவியா.

இந்நிலையில் ட்விட்டரில் நடிகை ஓவியா கூறியதாவது: பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய நீங்கள் சம்மதிக்கிறீர்களா இல்லையா எனக் கேட்டார். 

இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் ஓவியாவிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஓவியா பதில் அளித்ததாவது:

போட்டியாளர்கள் தற்கொலை செய்யும் மனநிலைக்குச் செல்லும் வரை டிஆர்பி-க்காக அவர்களைக் கொடுமைப்படுத்தக்கூடாது என்றார்.

அந்தப் போட்டி இல்லாமல் உங்களுக்குப் புகழ் வந்திருக்காது என்கிற ஒரு கேள்விக்கு, என் புகழை விடவும் போட்டியாளர்களின் உயிர் முக்கியம் என்றார் ஓவியா.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com