இருவர் படம் தோற்றது ஏன்?: மணி ரத்னம் வெளிப்படுத்திய காரணம்!

அதிகமாகத் திட்டிக்கொள்ள மாட்டார்கள், பெரிதாகக் கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதைக் கதையாக மாற்றுவதில்...
இருவர் படம் தோற்றது ஏன்?: மணி ரத்னம் வெளிப்படுத்திய காரணம்!

மோகன் லால், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் மணி ரத்னம் இயக்கிய இருவர் படம் 1997-ல் வெளியானது. ரசிகர்களிடம் இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. 

இந்நிலையில் இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னத்தின் விளக்கத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன். 

தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணனின் சாய் வித் சித்ரா யூடியூப் சேனலில் இயக்குநர் வசந்த பாலன் பேட்டியளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர், பிரிதிவ்ராஜை வில்லனாக நடிக்க வைத்ததால் தான் காவியத் தலைவன் படம் வெற்றியடையவில்லை என நினைக்கிறீர்களா எனக் கேட்டிருந்தார். அதற்கு வசந்த பாலன் பதில் அளித்ததாவது:

இருவர் படம் ஏன் தோல்வியடைந்தது என்று மணி ரத்னம் சாரிடம் கேட்டதற்கு அவர் சொன்னார் - இரண்டு பேர், ஒருவருக்கு ஒருவர் பிடிக்காது. எனில் இருவரும் அதீத கொடூரத்தனங்களை, இவன் அவனுடைய வீட்டை அடித்து நொறுக்கினான், அவன் இவன் காரை எரிய வைத்தான், அவன் இவன் லாரியை எரிய வைத்தான் என ஓவர் ஆக்‌ஷனைப் பார்வையாளன் எதிர்பார்க்கிறான். வலிக்காமல் குத்துவது, வலிக்காமல் பேசுவது, மிகவும் நாகரிகமான இரு நண்பர்களிடையே உள்ள போட்டி என்பது சினிமாவுக்குப் பத்தாது. சினிமாவுக்கு அதிக மசாலா தேவைப்படுகிறது. அதிகக் கொடூரம், அதிக வன்முறை என்பதைத்தான் சினிமா எதிர்பார்க்கிறது. 

நாகரிகமான இரு நண்பர்கள், இவனை அவனுக்கும் அவனை இவனுக்கும் பிடிக்காது, அதிகமாகத் திட்டிக்கொள்ள மாட்டார்கள், பெரிதாகக் கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதைக் கதையாக மாற்றுவதில் சிக்கல் உள்ளது என்றார். இதே சிக்கல் தான் காவியத் தலைவனிலும் இருந்தது. இரு நண்பர்களுக்கிடையே உள்ள பொறாமையை கிளாஸாக சொன்னதால் எடுபடவில்லை. பாகுபலியில் இருவருக்குமான பகை என்பது வன்முறையாக இருக்கும். அதுதான் மக்களிடம் சென்று சேர்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com