பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா புகார்!

சென்னை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார். 
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா புகார்!

சென்னை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார். 

இளையராஜாவின் இசை அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ. இங்குதான் பல ஆண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வருகிறாா். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் நிா்வாகம். இளையராஜா தனது அத்தனை படங்களுக்கும் அங்குதான் இசை அமைத்தாா். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இதனை செய்தாா். இப்போது ஸ்டூடியோ வருமானம் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அங்கே அமைந்துள்ள பல ஸ்டூடியோக்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் வரும் வருமானத்தை பெருக்கும் விதமாக, எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்து விட்டு, மாற்று தியேட்டா் கொண்டு வர முடிவு செய்தனா். இதனால் இளையராஜாவின் இசைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. 

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பிரசாத் ஸ்டூடியோவில் திரையுலகினா் ஒன்று கூடி பிரசாத் ஸ்டூடியோ நிா்வாகத்தினரைச் சந்தித்துப் பேசினார்கள்.

பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்துள்ளேன். வாடகை கொடுக்கத் தயாராக உள்ளேன். இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இட உரிமை தொடர்பாகப் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டார்.

இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாததால் புதிய முடிவொன்றை எடுத்துள்ளார் இளையராஜா. சொந்தமாக இசைக்கூடம் ஒன்றைத் தொடங்கவுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கை இளையராஜா வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இடத்தில்தான் தனது இசைக்கூடத்தை அமைக்கவுள்ளார் இளையராஜா. வரும் செப்டம்பர் மாதம் முதல் ராஜா ஸ்டூடியோஸ் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார். பிரசாத் ஸ்டுடியோவில் தனது அறையில் இருந்த இசைக் குறிப்புகளைச் சேதப்படுத்தியுள்ளதாகத் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com