அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் சச்சிக்கு உதவ முன்வந்துள்ள பிரபலங்கள்!

இயக்குநர் சச்சிக்கு உதவ பிரபல மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் முன்வந்துள்ளார்கள்...
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் சச்சிக்கு உதவ முன்வந்துள்ள பிரபலங்கள்!

இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல மலையாள இயக்குநர் சச்சிக்கு உதவ பிரபல மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் முன்வந்துள்ளார்கள்.

அய்யப்பனும் கோஷியும் என்கிற மலையாளப் படத்தை இயக்கி, அதிக கவனம் பெற்ற இயக்குநர் சச்சிக்கு இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படமான அய்யப்பனும் கோஷியும் ஏராளமான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. பிரிதிவிராஜ், பிஜூ மேனன் நடிப்பில் சச்சி இயக்கிய இப்படம் பல மொழிகளில் ரீமேக் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழிலும் இப்படம் ரீமேக் ஆகவுள்ளது.

கே.ஆர். சச்சினாந்தம் என்கிற சச்சி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சூரில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 48 வயது சச்சிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதயத்துடிப்பு முடக்கம் (கார்டியாக் அரெஸ்ட்) ஏற்பட்டத்தால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சச்சி அனுமதிக்கப்பட்டார். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் தடை ஏற்பட்டுள்ளதால் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் சச்சிக்கு உதவ பிரபல மலையாளத் திரையுலகப் பிரபலங்களான நடிகர்கள் பிரிதிவிராஜ், பிஜூ மேனன், இயக்குநர்கள் ரெஞ்சித், பி. உன்னி கிருஷ்ணன் ஆகியோர் முன்வந்துள்ளார்கள். சச்சிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க கேரளாவின் பிரபல மருத்துவர்களை அணுகவுள்ளார்கள். ஒருவேளை, சச்சியை வேறொரு மருத்துவமனைக்கு மாற்ற நேர்ந்தால் அதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் பிரிதிவிராஜ், பிஜூ மேனன் உள்ளிட்ட சச்சியின் நண்பர்கள் செய்துள்ளார்கள். இதனால் சச்சி விரைவில் குணமாகி விடுவார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிஜூ மேனன்,  பிரிதிவிராஜ்.
அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிஜூ மேனன்,  பிரிதிவிராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com