இந்த வயதில் திருமணம் செய்தால் சிக்கல் வரத்தான் செய்யும்: சர்ச்சைகளுக்கு வனிதா விஜயகுமார் விளக்கம்

என் வாழ்க்கையில் இவ்வளவு நடந்த பிறகு. என்னுடைய ஆராய்ச்சியைப் பண்ணாமல் இருப்பேன்...
இந்த வயதில் திருமணம் செய்தால் சிக்கல் வரத்தான் செய்யும்: சர்ச்சைகளுக்கு வனிதா விஜயகுமார் விளக்கம்

திருமணம் தொடர்பான சமீபத்திய சர்ச்சைகளுக்கு நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகப் புகழை அடைந்தார். 

நடிகர் ஆகாஷை முதலில் திருமணம் செய்த வனிதா, 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். ஆனந்த் ராஜனை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா. பிறகு 2012-ல் ஆனந்த் ராஜனையும் வனிதா விவாகரத்து செய்தார். வனிதாவுக்கு விஜய ஸ்ரீஹரி என்கிற மகனும் ஜோவிதா, ஜெய்நிதா என்கிற இரு மகள்களும் உள்ளார்கள். மகன் ஸ்ரீஹரி ஆகாஷுடனும் இரு மகள்கள் வனிதாவுடனும் வசித்து வருகிறார்கள். 

சென்னை போரூரில் உள்ள வனிதாவின் இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி விஜயகுமார் - விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் ஆகியோரின் திருமணம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இத்திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டும் கலந்துகொண்டார்கள்.

எனினும், திடீர் திருப்பமாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41), வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளன. என்னிடம் விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணம் செய்துள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்குச் சில நாள்களுக்கு முன்பே அவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். 

இந்நிலையில் திருமண சர்ச்சை குறித்து நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய யூடியூப் தளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

பெரிய ஹிந்திப் படங்கள், ஹாலிவுட் படங்களில் பீட்டர் பால் பணியாற்றியுள்ளார். மிகவும் திறமைசாலி. அவரைத் தெரிந்தவர்களை எனக்குத் தெரியும். வனிதாவை இந்த 39 வயதில் ஒருவர் ஏமாற்ற முடியாது.

ஏழரை வருடங்களாகத் தனியாக இருந்து வருகிறார். பீட்டர் பாலுக்கு முன்பே திருமணமானது எனக்குத் தெரியும். கணவன் - மனைவி இடையே பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்றும் எனக்குத் தெரியும். ஒரு தம்பதி ஏழரை வருடங்கள் பிரிந்துள்ளார்கள் என்றால் ஒரு பெரிய பிரச்னை இருக்கவேண்டும். இதற்கான காரணத்தைக் கேட்டபோது நாகரிகமாக சில விஷயங்களை அவர் சொல்லவில்லை. தன் மனைவி பற்றி ஒரு கணவர் தவறாகச் சொல்லக்கூடாது. அதை நானும் நம்பமாட்டேன். 

கரோனா காரணமாக இப்போது நீதிமன்றங்கள் மூடியுள்ளன. முக்கியமாக குடும்ப நல நீதிமன்றங்கள். பீட்டர் பால் ஏற்கெனவே தன் மனைவியிடம் சொல்லியுள்ளார். நாம் பிரிந்துவிடலாம் என்று. இதற்கு அவர், பணம் தொடர்பாக ஆதரவளிக்கக் கோரினார். 5 லட்சம் குழந்தைகள் பெயரில் வங்கியில் டெபாசிட் பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் இதற்குத் தயாராக இருந்தார்கள். கையெழுத்து போட்டு விடுகிறோம், பணத்தை ஏற்பாடு செய்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

இத்தனை வருடங்கள் கணவர் என்ன செய்கிறார் என்று கூட அவருக்குத் தெரியாது? அவர் மகளை என்னிடம் பேச அனுப்பதில்லை. இதை அவர் மகன் என்னிடம் சொல்லியிருக்கிறார். குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளை பீட்டர் பால் சரியாகச் செய்துள்ளார்.

இந்த உறவு பற்றி என் மகள்களிடம் பேசினேன். பலரும் என்ன இவர் மகள்களைப் பேசவைக்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார்கள். குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று நன்றாகவே தெரியும். குழந்தை வளர்ப்புக்கான அறிவுரையை யாரும் எனக்குச் சொல்லவேண்டாம்.

நான் கிறிஸ்துவராக மாறினால் தான் தேவாலயத்தில் திருமணம் செய்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் பதிவுத் திருமணம் செய்யலாம். இந்த இரண்டுமே இந்தக் காலக்கட்டத்தில் செய்ய முடியாது. இரு மனங்கள் சேர்வதுதான் திருமணம். அதை மீறி எதுவும் கிடையாது.

நான் பீட்டர் பாலிடம் சொன்னேன், சட்டபூர்வமாகப் பிறகு பண்ணிக்கொள்ளலாம். இப்போதைக்கு சென்டிமென்டாக மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் என்றேன். காதலைக் கொண்டாடுவதற்கு அச்சப்படக் கூடாது. அவர் தங்கமான மனிதர். என் பிள்ளைகளுக்கும் அவரைப் பிடித்திருக்கிறது. பீட்டர் பாலின் மனைவியை யாரோ தூண்டி விடுகிறார்கள். அவர் இப்படிப் பேசுவதற்குக் காரணம் உள்ளது.

அன்று நடைபெற்றதை திருமணம், நிச்சயதார்த்தம் என ஊடகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். என் மனத்துக்கு அது கல்யாணம் என்றால் கல்யாணம். அவரை நான் காதலிக்கிறேன். அவருடன் வாழ விருப்பப்படுகிறேன். இதில் எனக்கு எந்த ஒரு அவமானமும் இல்லை. அவர் புகார் அளித்ததாகக் கேள்விப்பட்டேன். புகாரிலும் பீட்டர் பாலிடமிருந்து கடந்த ஏழரை வருடங்களாகப் பிரிந்து வாழ்வதைத் தெளிவாக எழுதியுள்ளார். இப்போது திடீர் என்று வந்து, வனிதா அவரைக் காதலிக்கிறார், எனக்கு என் புருஷன் வேண்டும் என்று சொன்னால் எப்படி? கடந்த 4 வருடங்களாகப் பிரிந்து வாழ்வதாகச் சொல்கிறார். ஆனால் நாலு நாள் கூட இவருக்கு போன் செய்யவில்லை. அவர் அம்மாவுக்கு போன் செய்தால் போன் எடுக்கவில்லை என்கிறார்.

இது வாழ்க்கைப் பிரச்னை. நான் எல்லாம் என் கணவருக்காக சாலை மறியல் செய்துள்ளேன். இன்றைக்கும் தேவையென்றால் செய்வேன். என்னையும் அவர் நேரில் சந்திக்கவில்லை. ஒரு மெசேஜ் அனுப்பவில்லை. உங்கள் மகனிடம் என் போன் நம்பரும் என் மகள்களின் போன் நம்பர்களும் இருக்கிறதே!

நான் கல்யாணம் செய்துவிட்டதால் உங்கள் கணவர் திரும்ப வேண்டுமா?

கலாசாரம் பற்றி யாரும் பேசவேண்டாம். முகக்கவசம் அணிந்து திருமணம் செய்துகொள்கிறார்கள். இது நம் கலாசாரமா? காவல்துறை வனிதாவுக்கு ஆதரவளிக்கவில்லை. நியாயமாகப் புகார் அளித்தால் அதை எடுத்துக்கொள்வார்கள். முன்பு, காவலர்கள் மீது நான் புகார் அளித்துள்ளேன். காவல்துறைக்கும் எனக்கும் நல்ல உறவு எப்போதும் இருந்தது கிடையாது.

யாரும் இங்கு முட்டாள் இல்லை. பீட்டர் பாலைப் பற்றி ஊடகங்களில் அவதூறாகப் பேசுகிறார். அவருடைய நண்பர்கள் எல்லோரும் எனக்குத் தெரியும். அவர் மதுப்பழக்கம் இல்லாதவர். அசைவம் கூட உண்ணமாட்டார்.

இப்போது பிக் பாஸ் ஆரம்பிக்கவில்லை. வனிதா விஜயகுமார் டிரெண்டிங், பீட்டர் பால் டிரெண்டிங் மூலம் புகழை அடைந்து அடுத்த பிக் பாஸுக்கு அவர் தயாராகலாம். சீஸன் 2-வில் ஒரு நடிகர் மனைவி பிக் பாஸில் இடம்பெற்றார். இதனால் பிரபலமாகிறவர்களும் இருக்கிறார்கள். எங்கள் பிரபலத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்.

பீட்டர் பால் தான் என் குழந்தைகளின் அப்பா, அவர் தான் அங்கீகாரம் என்கிறார். இது தெரிந்து தான் இத்தனை வருடங்களாக அவருடன் வாழாமல் இருந்தீர்களா? ஊடகங்களில் அவர் பெயரை மோசமாக்கி, கடைசியில் என் புருஷன் தான் எனக்கு வேண்டும் என்கிறார்.

உண்மையாகப் பிரச்னை இல்லை. சட்டபூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அது நடந்துகொண்டிருக்கிறது. ஊரடங்கால் சில விஷயங்கள் தாமதமாகின்றன. அதனால் தான் நாங்கள் பதிவுத் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏழரை வருடங்கள் தனியாகப் போராடுகிற மனிதராக, அன்புக்கு ஏங்குகிற மனிதராக, உண்மையான அன்பு கொடுக்கிற மனிதராக பீட்டர் பாலை நான் பார்க்கிறேன். 

குழந்தைகள் முன்னாடி முத்தம் கொடுக்கிறீர்களே, வெட்கமாக இல்லையா எனக் கேட்கிறார்கள். அன்பைப் பரிமாறுவது ஆபாசமா? கரோனாவால் எவ்ளவு பேர் தினமும் பாதிக்கப்படுகிறார்கள்? உங்களுக்கு வேறு பிரச்னைகளே இல்லையா?

திருமணச் சர்ச்சை பற்றி ஊடகங்களில் பேசமாட்டேன் என பீட்டர் பால் கூறிவிட்டார். நான் எனக்காகப் பேசுகிறேன். சிங்கிள் மதராக இருப்பதில் உள்ள பிரச்னை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த வயதில் திருமணம் செய்தால் சிக்கல் வரத்தான் செய்யும். யார் வாழ்க்கையையும் யாரும் பிடுங்கிக்கொண்டு வரவில்லை.

என் குழந்தைகளை இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்கிறார்கள். எங்களுக்குள் புரிதல் உண்டு. என் குழந்தைகள் எனக்குச் சகோதரிகள் போலவும் உள்ளார்கள். உங்கள் வீட்டில் உங்கள் குழந்தைகள் பேச்சைக் கேட்பதில்லை என்பதால் எங்களைப் பார்த்துப் பொறாமைப்பட வேண்டாம்.

இப்போதும் என் மனத்தில் உள்ள வலியைப் பகிர்ந்துகொண்டுள்ளேன். பலர் எனக்கு ஆதரவாகப் பதில் எழுதுகிறார்கள். 

நீங்கள் அவர் மீது பரிதாபப்படுவதால் அவருக்குப் புருஷன் கிடைக்கப் போவதில்லை. என்னைப் பற்றி பேச அவருக்கு உரிமை கிடையாது. பீட்டர் பாலுடனான என் திருமணம் நிச்சயம் பதிவு செய்யப்படும். தற்போதைய சூழலால் அது காலதாமதமாகும். 40 வருடங்கள் பீட்டர் பாலுக்காகக் காத்திருந்தேன். இப்போது கண்டுகொண்டேன். நான் உடனடியாக ஒருவரை ஏற்றுக்கொள்ளமாட்டேன், அதுவும் என் வாழ்க்கையில் இவ்வளவு நடந்த பிறகு. என்னுடைய ஆராய்ச்சியைப் பண்ணாமல் இருப்பேன்? நான் ஏமாறவில்லை. சும்மா பிரச்னையைக் கிளப்புகிறார்கள். திருஷ்டி பட்டு போச்சு. எந்தத் திருமணமும் இந்தளவுக்கு டிரெண்டிங் ஆனதில்லை. இந்தத் தடங்கல் தற்காலிகமானது தான். நான் தவறான பெண் கிடையாது. இன்னொருவரின் வாழ்க்கையைக் கெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com