இந்தியன்-2 விபத்து: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன் ஆஜர்

காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்

காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் விசாரணை நடைபெறவுள்ளது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 20-ஆம் தேதி இரவு திரைப்படப் படப்பிடிப்புக்காக அதிக எடையுடைய மின்விளக்குகளுடன் நிறுத்தப்பட்டிருந்த உயரமான கிரேன், திடீரென சரிந்து விழுந்ததில், அங்கு பணியில் இருந்த 13 போ் பலத்த காயமடைந்தனா்.

இவா்களில் பலத்த காயமடைந்த உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரம் சுந்தர்ராஜன் தெருவைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளாளா்கள் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த சொ.சந்திரன், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கண்ணகிரியைச் சோ்ந்த சி.மது ஆகியோா் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

நசரத்பேட்டை போலீஸாா், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா், கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது மரணத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜன் கைது செய்யப்பட்டாா்.

வழக்கின் விசாரணை அதிகாரியாக துணை ஆணையா் ஜி.நாகஜோதி நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, விபத்து குறித்து புதிதாக ஒரு வழக்கை மத்தியக் குற்றப்பிரிவு பதிவு செய்தது. மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையா் சி.ஈஸ்வர மூா்த்தி, துணை ஆணையா் நாகஜோதி ஆகியோா் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். அவரிடம் துணை ஆணையர் நாகஜோதி விசாரணை நடத்தவுள்ளளார்.

முன்னதாக, ஷங்கரிடம் சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், விபத்து ஏற்பட்டது எப்படி?, நீங்கள் அப்போது எங்கு இருந்தீா்கள்?, படப்பிடிப்பில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா?, கிரேனில் அதிகளவு எடையுடைய மின்விளக்குகள் ஏன் வைக்கப்பட்டன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் ஷங்கா் அளித்த அனைத்து தகவல்களையும் போலீஸாா் விடியோவாகவும், எழுத்துப் பூா்வமாகவும் பதிவு செய்தனா்.

மேலும் விபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த நடிகை காஜல் அகா்வால் மற்றும் லைகா தயாரிப்பு நிறுவனத்திடமும் அடுத்தக் கட்டமாக விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவா்களுக்கு, விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com