துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னைகள் என்னென்ன?: விஷால் விளக்கம்

இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரைக் கெடுப்பது அல்ல. ஆனால்..
துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னைகள் என்னென்ன?: விஷால் விளக்கம்

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு லண்டனில் தொடங்கியது. எனினும் சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டது. இதனால் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இதையடுத்து படத்தைத் தானே இயக்க முடிவெடுத்துள்ளார் விஷால்.

துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குகிறார். இப்படத்துக்கான முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

ஓர் இயக்குநர் திரைப்படத்தை விட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்னென்ன?

கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாகப் பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத்தளத்தைத் தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய்க்கு பக்கம் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஓர் இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு இயக்குனர் ஒரு திரைப்படத்திலிருந்து விலகுவது ஏன்?

ஒரு தயாரிப்பாளராக, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா? இல்லை .

படத்தின் தயாரிப்பின்போது ஓர் இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக்காட்டினால் அது தவறா? யு.கே.வில் 3 முதல் 4 மணி நேர படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காகச் சுட்டிக்காட்டிய விஷயங்களா? இல்லை.

ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்குப் பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா? இல்லை.

நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன், ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்தக் குழந்தையை அனாதை இல்லத்தில் கைவிடுவது போல மோசமாக இருக்கிறது.

இப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு, இப்படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி அலுவலகத்திற்கு வருவது ஓர் இயக்குநருக்குச் சரியானதா?

திரைப்படத் தயாரிப்பின் போது ஏற்படும் ஆர்வத்தையும், தயாரிப்பாளர் சந்திக்கும் கஷ்டங்களையும் இயக்குநர் அறிந்திருக்கிறாரா?

நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுகத் தயாரிப்பாளரோ, அறிமுகத் தயாரிப்பாளரோ, எந்தத் தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அவர்கள் ஷூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்க கூடாது என்பதற்காகத்தான்.

மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையை சந்திக்கக்கூடாது. நல்லவேளையாக, திரைப்பட தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இப்படத்தை கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால், முன்னோக்கிச் சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும் உறுதிசெய்கிறேன்.

இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரைக் கெடுப்பது அல்ல. ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்தத் தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம். ஆனால், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்) போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு 'துப்பறிவாளன்-2' படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அனைத்துத் தயாரிப்பாளர்களும் (புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள்) அறியவேண்டும் என நினைக்கிறேன்.

இயக்குநராக அறிமுகமாக உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஓர் இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com