விசு மரணம்: இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர். தனக்கென ஒரு பாணியும் அதில் வெற்றியும் பெற்றவர்...
விசு மரணம்: இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

நடிகரும் பிரபல இயக்குநருமான விசு (75), உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘மணல் கயிறு’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவா் விசு. குடும்ப கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவா் இயக்கிய பல படங்கள் ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1945-ஆம் ஆண்டு பிறந்த விசு, திரைப்படம் தவிா்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடா் பலவற்றிலும் நடித்துள்ளாா். கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்து பின்னா் இயக்குநா் ஆனாா். இவா் இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் மிகவும் பிரபலமானதாகும். பெரும்பாலான இந்திய மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. இவருடைய திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சோ்ந்ததாகும். ‘உழைப்பாளி’, ‘மன்னன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளாா்.  வசனகா்த்தா, கதாசிரியராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளாா்.   கடைசியாக 2013-ஆம் ஆண்டு வெளியான ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தில் விசு நடித்திருந்தாா். இவருக்கு மனைவி உமா, மகள்கள் லாவண்யா, சங்கீதா, கல்பனா உள்ளனா்.

சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த விசு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இன்று இறுதிச் சடங்கு: விசுவின் உடல், சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை நடைபெறுகின்றன.

விசுவின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

ரஜினி

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய்காந்த்

பிரபல இயக்குநர்-நடிகர் மற்றும் எனது நண்பருமான திரு. விசு அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். டௌரி கல்யாணம், ஊமை விழிகள், புதிய சகாப்தம் உள்ளிட்ட படங்களில் அவருடன் நடித்த நாட்கள் என்றும் நினைவில் நிற்கும். பன்முகத் திறமையும், நல்ல மனமும் கொண்ட திரு. விசு அவர்களின் இழப்பு திரைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், நண்பர்கள், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

வைரமுத்து

விசுவின் மறைவு வேதனை.
கருத்துள்ள கதை, கத்திபோல் உரையாடல்,
நம்பகத் தன்மைமிக்க நாடகம்,
நாகரிகத் திரைக்கதை எல்லாம்
கைவரப் பெற்ற கலைஞன்.
சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி 
பாடல் எழுதிய பழைமை மறக்காது.
விசு நீண்டகாலம் நினைக்கப்படுவார்.

நடிகர் விவேக்

மிக நேர்மையாக, உண்மையாக , கண்ணியமாக அதே நேரம் கண்டிப்பாக வாழ்ந்து, நம்மைப் பிரிந்து இருக்கும் விசு அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் இதய அஞ்சலி. நேரில் வந்து இறுதி மரியாதை செய்ய முடியாததற்கு வருந்துகிறேன்

இயக்குநர் சேரன்

தனித்தன்மை கொண்டவர். நல்ல சிந்தனைவாதி. எளியவர்களின் நிலை உணர்பவர். அவருடைய எழுத்தாற்றல் சிறப்பானது. இயக்குனர் சங்கத்திலும் எழுத்தாளர் சங்கத்திலும் அவரின் உழைப்பு அபாரமானது. காலம் ஒவ்வொரு கலைஞனையும் ஒருநாளில் பறித்துக்கொள்கிறது. சாதனையாளனை சல்யூட்டுடன் வழியனுப்புவோம்.

இயக்குநர் சிம்புதேவன்

நடுத்தர வர்க்கத்தின் உறவுகளின் பந்தங்களை, உணர்ச்சிகளின் வலிகளை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் திரு விசு சார்! கதை வசனம் அவரின் பெரும் பலம்! பல நல்ல படைப்புகள் கொடுத்துள்ளார். அவரது பிரிவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்! 

நடிகர் பார்த்திபன்

விசு சார் RIP - தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர். தனக்கென ஒரு பாணியும் அதில் வெற்றியும் பெற்றவர். “உங்கள் மாமனாரை கேட்டுப்பாருங்கள்” என்ற வீடியோவை 10 தடவை பார்த்திருப்பேன். அடிக்கோடிட்ட argument.மரணத்திற்கு முன்பான சாதனையே மனதோடு ஒட்டிக்கொள்வது. அப்படிப்பட்டது விசு சாரின் வாழ்க்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com