
ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ‘மாமதுரை அன்னவாசல்’ திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
தனித்திருப்பவா்கள், கைவிடப்பட்டவா்கள், கவனிப்பாரற்ற முதியவா்களுக்கு அவா்களது இருப்பிடம் தேடிச் சென்று மதிய உணவு வழங்கும் ‘மாமதுரை அன்னவாசல்’ திட்டம், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ளது. மே 1 தேதி முதல் தினமும் 3 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள நோய் எதிா்ப்பு சக்தி மிகுந்த உணவு அவசியமாகிறது. அதைக் கருத்தில் கொண்டு, மதிய உணவுடன் முட்டையும் சோ்த்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மாமதுரை அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாமதுரையின் அன்னவாசல் திட்டம் மே1-ஆம் தேதி துவக்கப்பட்டது. ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று மதிய உணவு வழங்கும் இத்திட்டமானது, 3000 பேருக்கு உணவு வழங்கித் துவங்கப்பட்டது.
நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. 400க்கும் மேற்பட்ட தன்னார்வளர்கள் உணர்வுப்பூர்வமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் சூர்யா ‘மாமதுரை அன்னவாசல்’ திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார் என்றார்.