டாஸ்மாக் கேள்விக்குப் பதில் அளிக்கத் தயங்கிய நடிகர் சூரி!

காவலர்களை வாழ்த்தவே இங்கு வந்துள்ளேன். அவர்கள் கையாலேயே உள்ளே தூக்கி வைத்துவிட வேண்டாம்.
டாஸ்மாக் கேள்விக்குப் பதில் அளிக்கத் தயங்கிய நடிகர் சூரி!

நகைச்சுவை நடிகர் சூரி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு இன்று வருகை தந்தார். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களிடமும் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்ட சூரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடினமான காலக்கட்டத்தை நாம் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். நம் உயிரைப் பாதுகாப்பதற்காக நம்மை வீட்டுக்குள் இருக்கச் சொல்லிவிட்டு, வெளியே இருந்து இரவு பகல் பாராமல் நம் குடும்பத்துக்காக தன் குடும்பத்தைப் பிரிந்து வேலை செய்து வருகிறார்கள் காவலர்கள். ஊருக்கு வெளியே அய்யனார் இருக்கிறார். காக்கிச்சட்டை போட்ட அய்யனராக, நடமாடும் தெய்வமாக, சாமியாக காவல்துறை அதிகாரிகள் தெரிகிறார்கள். இன்று 60-க்கும் மேற்பட்ட காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நம் உயிருக்கு அவர்கள் உத்தரவாதமாக இருக்கும் நிலையில் தற்போது அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் எப்படியாவது வீட்டுக்கு வந்துவிடுங்கள் என அவர்களின் குடும்பத்தினர் கதறுகிறார்கள். இந்த நேரத்தில் காவலர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.

நாங்களெல்லாம் சினிமாவில் தான் ஹீரோவாக இருக்கிறோம். ஆனால் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தான் நிஜக் கதாநாயகர்கள். எனக்கு காவலர்களிடம் ஆட்டோகிராப் வாங்கவேண்டும் என்று தோன்றியது. என் குழந்தை இதைச் சொல்லியது. அதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். இதனால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

டாஸ்மாக் கடைகளைத் திறப்பது பற்றி கேட்கிறீர்கள். அதற்கு நான் வாயைத் திறக்காமல் தான் இருக்கவேண்டும். எந்த வார்த்தை சொன்னால் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள், எந்த வார்த்தை சொன்னால் பக்குவமாக வீட்டுக்குப் போக முடியும் என நான் யோசிக்கவேண்டும். காவலர்களை வாழ்த்தவே இங்கு வந்துள்ளேன். அவர்கள் கையாலேயே உள்ளே தூக்கி வைத்துவிட வேண்டாம். பிறகு என் மனைவி வீட்டிலிருந்து போன் செய்து கதறவேண்டுமா? கரோனா ஒரு முடிவோடுதான் திரிகிறது. எனவே நாம் பாதுகாப்பாக இருப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com