தமிழ் பேசும் நடிகையாக உள்ளதால் பட வாய்ப்புகளை இழந்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் சந்தித்த அவமானங்களும் சவால்களும்

சிறிய வேடங்களுக்கு முயற்சி செய்யுங்கள், கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என நேரத்தை வீணடிக்க வேண்டாம்...
தமிழ் பேசும் நடிகையாக உள்ளதால் பட வாய்ப்புகளை இழந்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் சந்தித்த அவமானங்களும் சவால்களும்

தமிழ் சினிமாவின் மகத்தான நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ்த் திரையுலகில் தான் எதிர்கொண்ட சவால்கள், அவமானங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

ஐஐஎம் திருச்சியில் நடைபெற்ற டெட்எக்ஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு மத்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:

என் வாழ்க்கைப் பயணத்தை உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.

சென்னையில் வளர்ந்த நான், கீழ் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். குடிசைப் பகுதி என்று சொல்லக்கூடிய இடத்திலிருந்து வந்தவள். வீட்டுவசதி வாரியத்தின் அடுக்ககத்தில் குடியிருந்தோம். எங்கள் குடும்பத்தில் 6 பேர் இருந்தார்கள். அம்மா, அப்பா, 3 சகோதரர்கள். நான் தான் இளையவள். என்னுடைய தாய்மொழி தெலுங்கு.

எனக்கு 8 வயதாகும்போது என் தந்தை இறந்துபோனார். என் அம்மா தான் எங்களை வளர்த்தார். என் அப்பாவின் இழப்பை உணராத அளவுக்கு எங்களைப் பார்த்துக்கொண்டார். என்னுடைய அம்மா எல்.ஐ.சி. முகவராகவும் உள்ளார். இன்றைக்கும் என் சக நடிகர்களிடம் ஒரு எல்.ஐ.சி. பாலிசி போடுறீங்களா என்று கேட்பார். அம்மா, ஏன் இப்படி பண்றே என அவரிடம் சொல்வேன்.

என்னுடைய 12 வயதில் என்னுடைய மூத்த அண்ணன், காதல் பிரச்னையால் இறந்து போனார். அது தற்கொலையா கொலையா என எங்களுக்குத் தெரியாது. ஒன்றரை வருடங்கள் கழித்து, என்னுடைய இன்னொரு அண்ணன் சாலை விபத்தில் இறந்துபோனார். அவர் அப்போதுதான் சம்பாதிக்க ஆரம்பித்தார். குடும்பப் பாரத்தைச் சுமக்க ஒருவர் வந்துவிட்டார் என அம்மா மகிழ்ச்சியடைந்த தருணத்தில் அவரும் மறைந்து போனார்.

இதனால் நான் வேலைக்குப் போக ஆரம்பித்தேன். சில வேலைகள் செய்தபிறகு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எனக்குச் சம்பளம் குறைவாகக் கொடுத்தார்கள். ஒரு நாளைக்கு ரூ. 1500 கொடுத்தார்கள். ஆனால் ஒரு மாதத்துக்கு ஆறு நாள்கள் தான் படப்பிடிப்பு இருக்கும் என்றார்கள். மற்ற நடிகைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ. 25,000க்கும் மேல் சம்பளம் கிடைத்தது. என் அம்மாவிடம் இதற்குக் காரணம் கேட்டேன். சினிமா நடிகையாகப் புகழ் பெற்ற பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தால் அதிகச் சம்பளம் கிடைக்கும் என்றார். இதன்பிறகு சினிமாவில் நடிக்க முயன்றேன். கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். அதை வைத்துக்கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடினேன்.

அவர்களும் இவர்களும் என்கிற படத்தில் முதல் முதலாக நடித்தேன், அது ஓடவில்லை. என் நிறம், என் தோற்றம், வட இந்திய நடிகைகள் போல உடை உடுத்தத் தெரியாதது போன்றவற்றால் பிரச்னைகளைச் சந்தித்தேன். நான் தமிழில் பேசியதால் எனக்கு வாய்ப்பு வழங்கவும் மறுத்தார்கள். தமிழ் பேசுறீங்களா, வாய்ப்பில்லை! இப்படித்தான் தமிழ்த் திரைத்துறையில் நடக்கிறது.

நீங்கள் எல்லாம் கதாநாயகிக்கான நபர் கிடையாது, எனவே சிறிய வேடங்களுக்கு முயற்சி செய்யுங்கள், கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சில இயக்குநர்கள் என்னிடம் கூறினார்கள். இதை என் முகத்துக்கு நேராகவே சொன்னார்கள். நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பளித்தார்கள்.

2, 3 வருடங்களுக்கு எனக்கு வாய்ப்புகளே வரவில்லை. பிறகு அட்டகத்தியில் நடித்தேன். சிறிய வேடம் தான். ஆனால் எனக்கு அடையாளம் கொடுத்தது. பண்ணையாரும் பத்மினியும், ரம்மி போன்ற படங்களில் நடித்தேன். என் வாழ்க்கையை மாற்றிய படம் - காக்கா முட்டை. யாரும் அந்த வேடத்தில் நடிக்க விரும்பவில்லை. ஆனால் எனக்குச் சரியாகப் பட்டது. அதுதான் திருப்புமுனையாக அமைந்தது. எப்படி நடிக்கவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார் இயக்குநர் மணிகண்டன். படம் வெளிவந்த பிறகு பாராட்டுகள் கிடைத்ததே தவிர பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒரு வருடம் வாய்ப்புகளே வரவில்லை.

வடசென்னை படத்தில் தனுஷுடனும் தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடனும் நடித்தேன். சரி, எனக்கு யாரும் வாய்ப்பளிப்பதில்லை, நம் படத்துக்கு நாமே கதாநாயகனாக இருப்போம் என்றுதான் கனா படத்தில் நடித்தேன். இந்தப் படமும் என் வாழ்க்கையை மாற்றியமைத்தது. நிறைய விருதுகளையும் வாய்ப்புகளையும் அளித்தது. இப்போது ஆறேழு படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் நடிக்கிறேன். (கைத்தட்டல்)

என் திறமையை நம்பினேன். நம்புங்கள், எனக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை. நானே எனக்கு ஆதரவாக இருந்தேன். பாலியல் தொல்லை உள்பட பல சூழல்களைச் சந்தித்துள்ளேன். அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என எனக்குத் தெரியும் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com