கரோனோவை விட பெரிய கொடுமைகளைச் சந்தித்தேன்: திகைத்துப் போயிருக்கும் கவிஞர் தாமரை

காலம் இப்படிக்கூட ஒருவரைக் குறிவைத்துப் பந்தாடுமா என்று திகைத்துப் போயிருந்தேன்...
கரோனோவை விட பெரிய கொடுமைகளைச் சந்தித்தேன்: திகைத்துப் போயிருக்கும் கவிஞர் தாமரை

கரோனோவை விட பெரிய கொடுமைகளைச் சந்தித்ததாக கவிஞர் தாமரை கூறியுள்ளார்.

ஊரடங்கு காலம் குறித்து ஃபேஸ்புக்கில் அவர் எழுதியதாவது:

மார்ச் 24, 2020 சமரனின் + 2 இறுதித் தேர்வு. அது முடியமுடியவே வீடடங்கு ஆரம்பமாகி விட்டது.

நண்பர்கள், நலம்விரும்பிகள், ரசிகர்கள் எனப் பலரும் என் நலன் விசாரித்து செய்தி அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். பதிலளிக்கவோ, அதிகம் முகநூல் பதிவுகளிடவோ முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், என் செல்பேசி பழுதானதுதான். சமரனின் தேர்வு முடியட்டும் பிறகு செய்து கொள்ளலாம் என ஒரு பெரும்பட்டியலே வைத்திருந்தேன். அதில் இது முதன்மையானது.

ஊரடங்கால் எதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

சரி, கரோனாவை எப்படி சமாளித்தீர்கள் என்பதுதானே எல்லோரது கேள்வியும்!

கரோனாவை விடப் பெரிய கொடுமைகளுக்குக் கடந்த பல மாதங்களாகவே முகம்கொடுத்துக் கொண்டிருந்ததால், கரோனாவெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!

பல திக்குகளிலிருந்தும் தாக்குதல்... காலம் இப்படிக்கூட ஒருவரைக் குறிவைத்துப் பந்தாடுமா என்று திகைத்துப் போயிருந்தேன்.

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது போலிருந்தது... சமரன் தேர்வு முடிந்ததும் வெளியே வந்து கடும் நடவடிக்கை எடுக்க இருந்தேன். அவன் படிப்புக்கு ஏதும் இடையூறு வந்து விடக் கூடாதே என்றுதான் பொறுமை காத்தேன்! படிப்புக்கு மட்டுமல்ல, அவனுக்கே இடையூறு நேர்ந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டியிருந்தது.

ஆனால் அதற்குள் கரோனா வருகை தந்து எல்லாவற்றையும் திருப்பிப் போட்டுவிட்டது. அதென்னவோ தெரியவில்லை, தீயவர்களை எப்போதும் காலம் காப்பாற்றி விடுகிறது. சரி இருக்கட்டும், எங்கே போகப் போகிறது, பஞ்சாயத்தைப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று மீண்டும் பொறுமை காக்கிறேன்.

மற்றபடி, வீட்டிலிருப்பது, தனித்திருப்பது, தற்சார்போடு இருப்பது, யாரோடும் பேசாதிருப்பது, விலகியிருப்பது எல்லாம் எனக்குப் பழக்கம்தான். ஐந்து ஆண்டுகளாக அதைத்தானே செய்து வருகிறேன்! அதனால் கரோனாவுக்கென்று சிறப்பான கெடுபிடிகள் எதுவும் எனக்கில்லை.

கரோனாவால் கிடைத்த புது அனுபவம் என்றால்.... அது பாடல் வேலைகள் ஏதுமின்றி அக்கடாவென்றிருந்ததுதான்!

கடந்த 25 ஆண்டுகளில் (கால் நூற்றாண்டு!) பாடல் வரிகள் மண்டைக்குள் ஓடாமல், மெட்டை முமுமுணுக்காமல், கெடு, பணியழுத்தம், கடைசித்தேதி, பதிவு நெருக்கடி, பாடல் வெளியீடு என எதுவுமில்லாமல் மூளை கொஞ்சம் காற்று வாங்கியது இதுவே முதல்முறை! எனவேதான், பாடல் எழுதலாமா என்று கேட்ட இயக்குநர்களிடம் 'கொஞ்சம் போகட்டும்' என்று தள்ளிப் போட்டு விட்டேன்.

கரோனாவால் விளைந்த இன்னொரு நன்மையெனில், நெட்பிளிக்ஸ் அமேசான், ஹாட்ஸ்டார் போன்றவற்றில் படங்கள் பார்க்கப் பழகியதுதான்! ஓ மை கடவுளே! இப்படியொரு உலகம் இருக்கிறதா... விடிய விடியப் பார்க்கும் போதையில் சிக்கியாகி விட்டது.

ஒரு புத்தகம்... ஒரேயொரு புத்தகம் கூடப் படிக்கவில்லை...

நண்பர்கள் சிலருக்கு உதவி, நண்பர்கள் மூலம் சிலருக்கு உதவி, விலங்கு ஆர்வலர்களுக்கு உதவி என முடிந்த வகையிலெல்லாம் உதவி செய்தது மனநிறைவு!

தனிப்பட்ட நம் வாழ்க்கையில் கரோனா காலம் கொடுத்த பாடம் இனி எப்போதும் நினைவில் இருக்க வேண்டும்:

1. நமக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.
2. குறைந்தது மூன்று மாத செலவுக்கான இருப்பு எப்போதும் வைத்திருப்பது!
3. வாழ்க்கை நிலையில்லாதது; நியாயத்தின் பக்கம் நிற்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி!

இவ்வாறு எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com