விஜய்யுடன் பேச்சுவார்த்தை இல்லையா?: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகா் பதில்

தொண்டர்கள் நிறைய நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கீகாரமும் உற்சாகமும்...
விஜய்யுடன் பேச்சுவார்த்தை இல்லையா?: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகா் பதில்

விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள தொண்டர்களுக்கு அங்கீகாரமும் உற்சாகமும் அளிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகா் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் நிா்வாகத்தை நடிகா் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகா் கவனித்து வந்தாா். அவா் அவ்வப்போது பல மாவட்டங்களுக்குச் சென்று விஜய் மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தாா்.

இந்தச் சூழ்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் தலைமை தோ்தல் ஆணையத்தில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விண்ணப்பத்தில், விஜய்யின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவராக பத்மநாபன் என்பவரின் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுச் செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகா், பொருளாளராக விஜய்யின் தாயாா் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: 

எனது தந்தை ஒா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளாா் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவிதத் தொடா்பும் கிடையாது என்பதை திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் அவா் (தந்தை) அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னைக் கட்டுப்படுத்தாது. மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அந்தக் கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சிப் பணியாற்றவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது: மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகா் விளக்கம் அளித்துள்ளார். இன்று நடைபெற்றுள்ள செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு எனக்குத் தேவைப்பட்டது. அதனால் செய்தேன். விஜய்க்கும் எனக்குமான சுமூக உறவு பற்றி கற்பனையாக சிலர் கூறுவதற்கு நான் விளக்கம் தர முடியாது. கரோனா காலத்தில் கூட இரண்டு மூன்று முறை இருவரும் சந்தித்துப் பேசினோம். 

விஜய் பெயரில் 93-ல் ஆரம்பித்த அமைப்பு, ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, நற்பணி மன்றமாக மாறி, மக்கள் இயக்கமாக மாறியது. மக்கள் இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் நிறைய நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கீகாரமும் உற்சாகமும் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைப் பதிவு செய்துள்ளேன். 

பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல இப்போது நேரம் இல்லை. நல்லதாக நினைத்து ஆரம்பித்துள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com