தீபாவளிக்குப் புதிய படங்கள் இல்லை: தமிழ்த் திரையுலகில் தொடரும் மோதல்!

ஒரு வருட காலத்திற்குத் தற்காலிகத் தீர்வு ஒன்றை எங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கி முன்வைத்தோம்...
தீபாவளிக்குப் புதிய படங்கள் இல்லை: தமிழ்த் திரையுலகில் தொடரும் மோதல்!

வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் - தயாரிப்பாளர்கள் இடையே உடன்பாடு எட்டப்படாததால் தீபாவளிக்குப் புதிய படங்கள் வெளியாகாது என இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. அதன்பின்பு, முழு பொது முடக்கத்தில் படிப்படியாகத் தளா்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. கடந்த அக்டோபா் மாதத்துடன் பெரும்பாலான தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

திரையரங்குகள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் திறப்பதற்கான உத்தரவை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 30-ஆம் தேதி வெளியிட்டாா். அதன்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும் நாளை (அக். 10) முதல் திறக்கப்பட உள்ளன. 50 சதவீதம் இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

திரையரங்குகளைத் திறப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் திரையரங்கு உரிமையாளா்கள் ஈடுபட்டுள்ளனா். திரையரங்குகளுக்குள் கிருமி நாசினி தெளிப்பது, ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடையே இடைவெளி விடும் வகையில் ஸ்டிக்கா் ஒட்டுவது, டிக்கெட் கவுன்ட்டா்கள் முன்பு சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தரையில் அடையாளக் குறிகள் இடுவது போன்ற அனைத்து பணிகளும் திரையரங்குகளில் முடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 997 திரையரங்குகள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 200 தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. கரோனா நோய்த்தொற்று காரணமாக, நிகழாண்டில் படத் தயாரிப்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளுக்குத் தளா்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவை விறுவிறுப்பு அடைந்துள்ளன.

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை ஒளிபரப்ப வி.பி.எஃப். கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை தயாரிப்பாளா்கள் செலுத்தி வந்தனா். இனிமேல் தியேட்டா் அதிபா்கள்தான் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் பாரதிராஜா தெரிவித்து இருந்தாா். கட்டணத்தைச் செலுத்தவில்லையென்றால் புதிய படங்களை தியேட்டா்களில் திரையிட மாட்டோம் என்றும் அவா் கூறினாா். இந்த கருத்துக்கு தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் திருப்பூா் சுப்பிரமணியம் எதிா்ப்புத் தெரிவித்தாா். வி.பி.எஃப். கட்டணத்தை வசூலிக்கும் டிஜிட்டல் நிறுவனங்களிடமிருந்து எங்களால் சலுகைகள் பெற்றுத் தர முடியும். அதன்படி, இதற்கான கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

வி.பி.எஃப். கட்டணம் கட்ட மாட்டோம் என்று தயாரிப்பாளா்கள் போா்க்கொடி தூக்கியுள்ளனா். இதனால் மீண்டும் தயாரிப்பாளா்கள் - திரையரங்கு உரிமையாளா்கள் இடையே பேச்சுவாா்த்தை தொடங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு நிபந்தனை ஒன்றை விதித்தார்கள். தற்போதைய நடைமுறைப்படி திரையரங்குகளுக்கான பங்கு 25% முதல் 50% வரையே உள்ளது. அதில் மாற்றம் கொண்டு வந்து, திரைப்பட வசூலில் 50% தந்தால் வி.பி.எஃப். கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்கள். ஆனால் இதில் எந்தவொரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. வி.பி.எஃப். கட்டணம் செலுத்த திரையரங்க உரிமையாளா்கள், தயாரிப்பாளா்கள் என இரு தரப்பும் மறுப்பதால் இந்த இழுபறி நீடித்துள்ளது.

பேச்சுவாா்த்தையில், எந்த உடன்பாடும் எட்டப்படாததால் தீபாவளியன்று திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வி.பி.எஃப். கட்டணம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு விடும் என்பதால், தீபாவளி பண்டிகை படங்களை வெளியிட தயாரிப்பாளா்கள் தயாராகி வந்தார்கள். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிஸ்கோத்’, ‘அட்டு’ ரிஷி ரித்விக் நடித்துள்ள ‘மரிஜுவானா’, யோகி பாபுவின் ‘பேய் மாமா’ ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்கள் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டன. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தற்போது வி.பி.எஃப். சம்பந்தமாக அனைத்து தரப்புகளின் நிலைப்பாட்டின் காரணமாக புதுப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும், சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் திரையரங்கு உரிமையாளர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தக் காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு ஒரு வருட காலத்திற்குத் தற்காலிகத் தீர்வு ஒன்றை எங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கி முன்வைத்தோம்.

எனினும் பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான தீர்வு எட்டப்படாததால் மீண்டும் தயாரிப்பாளர்களோடு கலந்தாலோசித்ததில் நல்ல தீர்வு ஏற்படும் வரை புதுப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும், திட்டமிட்டபடி திரையரங்குகளைத் திறக்க திரையரங்க உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளனா். கரோனா பொது முடக்க தொடக்க காலத்தில் நிறுத்தப்பட்ட படங்களான ‘தாராள பிரபு’, ‘ஓ மை கடவுளே’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஆகிய படங்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com