டிக்கெட் விலை ரூ. 60, ரசிகர்களுக்கு சாக்லெட்: தமிழ்நாட்டில் எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள திரையரங்குகள்

படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஃபைவ்ஸ்டார் சாக்லேட் தந்தும் குஷிப்படுத்தியுள்ளார்கள்
டிக்கெட் விலை ரூ. 60, ரசிகர்களுக்கு சாக்லெட்: தமிழ்நாட்டில் எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள திரையரங்குகள்

தமிழ்நாட்டில் எட்டு மாதங்களுக்குப் பிறகு குறைந்த அளவில் திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. 

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, கடந்த மாா்ச் இறுதியிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. திரையரங்க உரிமையாளா்கள் மற்றும் திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று, கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் அனுமதி அறிவிப்பு வந்தவுடனேயே திரையரங்குகளைத் தயாா்ப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளன. இருப்பினும், புதிய திரைப்படங்கள் வெளியிடுவது தொடா்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 

திரையரங்குகளைத் திறக்க 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளதால், புதிய பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளனா். அதன்படி, துல்கா் சல்மானின் ‘கண்ணும், கண்ணு​ம் கொள்ளையடித்தால்’, அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’, ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு, விஜய் நடித்த பிகில், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் இன்று முதல் மீண்டும் திரையிடப்பட்டுள்ளன. ஆங்கில மற்றும் ஹிந்திப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டுள்ளன. 

சில திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பூங்கொத்து கொடுத்து திரையரங்கு ஊழியர்கள் வரவேற்றுள்ளார்கள். படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஃபைவ்ஸ்டார் சாக்லேட் தந்தும் குஷிப்படுத்தியுள்ளார்கள்.

50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மிகக் குறைந்த அளவில் தான் முன்பதிவு நடந்துள்ளதாகச் சில திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 

சென்னை ஏஜிஎஸ் திரையரங்கில் விஜய் நடித்த பிகில் திரையிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் திரையரங்கில் டிக்கெட் கட்டணம் ரூ. 60 என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற நகரங்களில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் புதிய படங்களின் வெளியீடு குறித்த தகவல் தெரிந்த பிறகு முழு வீச்சில் திரையரங்குகளைத் திறக்க முடிவெடுத்துள்ளார்கள். சில திரையரங்குகள் நாளை (புதன்) முதல் திறக்கப்பட்டுள்ளன. பிக் பாஸ் புகழ் நடிகர் டேனியல், திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவம் குறித்து ட்வீட் வெளியிட்டுள்ளார்கள்.

புதிய படங்கள் வெளியாவது குறித்த அறிவிப்பு வந்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வழக்கம் போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

=

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com