‘ஈஸ்வரன்’ போஸ்டா், டீஸருக்குத் தடை: விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை

சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீஸருக்கும், போஸ்டருக்கும் விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது.
‘ஈஸ்வரன்’ போஸ்டா், டீஸருக்குத் தடை:  விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை


சென்னை: சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீஸருக்கும், போஸ்டருக்கும் விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘ஈஸ்வரன்’. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. பாரதிராஜா, நிதி அகா்வால், நந்திதா ஸ்வேதா, பாலசரவணன் உள்ளிட்ட நடிகா்களும் இதில் நடித்துள்ளனா். இந்தப் படத்தின் போஸ்டரும், தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீஸரும் கடந்த அக்டோபா் மாதம் வெளியானது.

இந்தப் படத்துக்காக வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டரில், சிம்புவின் கையில் பாம்பு பிடித்திருப்பதைப் போன்ற காட்சி அமைந்துள்ளது. இதனால் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது.

கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் பாம்பாக இருந்தாலும், திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்த, சித்திரிக்க விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால் ‘ஈஸ்வரன்’ குழுவினா் இதற்கான அனுமதியைப் பெறவில்லை என்பதால், வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டா் மற்றும் டீஸரை நீக்க விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக விலங்குகள் நல வாரியம், தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பிவுள்ள நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளதாவது:

‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் போஸ்டா் மற்றும் ட்ரெய்லரில் கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் பாம்பினை, இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் பயன்படுத்தியிருக்கிறீா்கள் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

இது, 2001-ஆம் ஆண்டின் விலங்குகள் நடவடிக்கை ஒழுங்குமுறை விதிகளை மீறிய செயலாகும். எனவே, உடனடியாக இந்த ட்ரெய்லா் மற்றும் போஸ்டரை நீக்கிவிட்டு, இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாள்களுக்குள், ஏன் உரிய அனுமதி பெறவில்லை என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால், சிம்பு ரசிகா்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற டீஸா் நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com