பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ஏன்?: செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் விளக்கம்

எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து, உள்ளே நான் நானாக...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ஏன்?: செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் விளக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பதிவு எழுதியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பங்கேற்கிறார்கள். இந்த 16 பேரும் நேற்று முதல் பிக் பாஸ் அரங்கில் வசித்து வருகிறார்கள். 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து இன்ஸ்டகிராமில் அனிதா சம்பத் தரப்பில் எழுதப்பட்டுள்ள பதிவு:

பெற்ற பிள்ளையை விட்டு விட்டு போகிற மாதிரி ஒரு கனமான உணர்வு. ஏழு வருடமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணியிருக்கேன். 7 வருட செய்தி வாசிப்பு. எனக்குச் சோறு போட்ட வேலை மட்டும் இல்லை, நான் நேசித்த, நான் ஏங்கின, நான் கனவு கண்ட, எனக்குப் பிடித்த வேலை. 

உனக்குப் பிறகு வந்த புது பெண்கள் எல்லாம் தொடர்கள், ஷோ அது இது என்று வளர்ந்து விட்டார்கள். நீ ஏன் இன்னும் நியூஸையே படித்துக்கொண்டு வளராமல் இருக்கிறாய் என நிறைய பேர் கேட்பார்கள்.

திடீர் டிரெண்டிங்குக்குப் பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும். அதில் நிறையவே சம்பாதிக்கலாம் எனத் தெரிந்தும் நான் எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்து எடுத்து வைக்கிற அடி நல்ல வாய்ப்பா நம்ம மனதுக்குச் சரி என்று பட்டால் மட்டும்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2 வருடங்களாகச் செய்திகளை விடாமல் இருந்தேன்.

கடைசியாக இப்போதைக்கு ஒரு சிறிய இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம்!

நான் பிரமித்துப் பார்த்த ஒரு உலகத்தரக் கலைஞனின் பக்கத்தில் நிற்கிற வாய்ப்பு.

உலகத்து சினிமாக்காரர்கள் எல்லாம் வாயைப் பிளந்து வியந்த ஒரு நடிகன், என் பெயரை உச்சரிக்கப் போகிற ஒரு வாய்ப்பு.

அவர் பக்கத்தில் நின்று பேசி இருக்கேன் என்று என் அடுத்தச் சந்ததியிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பு.

வெற்றி பெறுவதெல்லாம் வேறு விஷயம். முதலில் இந்த வாய்ப்பு என்பதே அவ்வளவு எளிதில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இல்லை.

இதைக் கண்டிப்பா அனுபவிக்க வேண்டும் என்றுதான் இந்த முடிவு.

எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து, உள்ளே நான் நானாக என்று எழுதியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com