இரண்டாம் குத்து போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன்: நடிகர் சாம்ஸ்

தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து...
இரண்டாம் குத்து போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன்: நடிகர் சாம்ஸ்

ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இதற்கு அடுத்ததாக இரண்டாம் குத்து என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாகவும் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகின. 

இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர், டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதேபோல, இரண்டாம் குத்து படத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தில் தான் நடித்ததற்கான காரணம் குறித்து நகைச்சுவை நடிகர் சாம்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் எழுதியதாவது:

இரண்டாம் குத்து படம் சம்பந்தமாக என்னைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு என்னுடைய சில சந்தேகங்கள், குழப்பங்களை வெளிப்படுத்தி இருந்தேன். அந்தப் பதிவிற்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் இருந்தன. பலரும் சொன்ன கருத்துகள், என் நல விரும்பிகள் சொன்ன அறிவுரைகளை வைத்து தற்போது என் கருத்தை, என் முடிவை சொல்லவே இந்த பதிவு.

என் கருத்து

இதுபோன்ற அடல்ட்ஸ் ஒன்லி சமாசாரங்கள் பாலிவுட், ஹாலிவுட் படங்களில், தொலைக்காட்சிகளில், செல்போன்களில், கணிணியில், ஓடிடி தளங்களில் எனத் தாராளமாக வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதே போன்று ஒரு விஷயத்தைப் படமெடுத்து தணிக்கையின் அனுமதியோடு வெளியிடுகிறேன். மற்றதையெல்லாம் பார்த்து அனுமதித்த, சிலநேரம் கண்டும் காணாமல் போகிற நீங்கள் என் படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு காட்டுகிறீர்கள் என்று இந்த படத்தை இயக்கி இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் கேட்டிருந்தார்.

அவன் செஞ்சா நீ செய்வியா என்று மற்றவர்கள் போல் கேட்டுவிட்டு என்னால் போக முடியவில்லை. அவர் கைகாட்டும் காரணங்களும் திருந்த வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் அதையெல்லாம் சரி செய்யும் பொருட்டு இதுவரை அதற்காக எந்த முயற்சியும் எடுத்ததில்லை. குரலும் கொடுத்ததில்லை. குறைந்தபட்ச ஒரு எதிர்ப்பு பதிவு கூட நான் போட்டதில்லை. மற்றவர்கள் செய்த தவறை இயக்குநர் சொல்வது போல் கண்டும் காணாமல் தான் போயிருக்கிறேன். அதைத் தாண்டி இவர் படத்தில் நடித்து வேறு இருக்கிறேன். அப்படி இருக்கையில் இவரை ஏன் இப்படி ஒரு படம் எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்கும் தகுதி, அருகதை, நேர்மை எனக்கில்லை என்றே நினைக்கிறேன். 

என் முடிவு

இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நடிகனாகவே இதுவரை இருக்கிறேன். இந்த மாதிரியான படங்கள் இப்போது சகஜமாகத் தான் வருகிறதே, அந்த வயது இளைஞர்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை ஜாலியாக காமெடியாகச் செய்யப் போகிறோம்.. ஏ படம் என்று தணிக்கைச் சான்றிதழோடு வரப் போகிறது, இதில் என்ன இருக்கிறது, நடித்தால் என்ன என்று தான் இந்தப் படத்தில் நடித்தேன். ஆனால் இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தைக் காப்பாற்றும் பொருட்டும், இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்றாலும் இனி இரண்டாம் குத்து போன்ற நேரடி அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதைத் தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன். முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன்... தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com