800 படத்தில் நடிப்பதைத் தவிர்க்க முடியுமா?: விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா வேண்டுகோள்

தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்...
800 படத்தில் நடிப்பதைத் தவிர்க்க முடியுமா?: விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா வேண்டுகோள்

133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 வருட இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் உருவாகும் இப்படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படும்.

முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. 

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்ற உச்சகட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் அரங்கேறியதாகவும் பரவலாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இலங்கை பாதுகாப்புப் படையினர் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்ததாக ஐ.நா. அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

படத்தின் போஸ்டரில், இலங்கையின் தேசியக் கொடியைக் கொண்ட இலங்கை அணி உடையை அணிந்துள்ளார் விஜய் சேதுபதி. இதுபோன்ற காரணங்களால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு மூத்த இயக்குநர் பாரதிராஜா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகுவேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் கடைக்கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க. 

தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். 

விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம் விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார், மறுத்திருக்கலாமே எனக் கேட்கின்றனர். அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. 

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலங்காலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதைத் தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள். 

பின்குறிப்பு : 

800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன். 800 திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம். இந்தத் திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக்காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா, இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பதா? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிப் பாருங்கள். பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்குப் பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம், ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது. 

உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர்  விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு, காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில், ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை உலகரங்கில் எடுக்க முன் வா. ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத்துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com