புதுச்சேரியில் பெரும்பாலான திரையரங்குகள் இன்று இயங்கவில்லை: காரணம் என்ன?

இவையெல்லாம் திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கூடுதல் சுமையாக உள்ளன...
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டாலும் பெரும்பாலான திரையரங்குகள் இயங்கவில்லை எனத் தெரிகிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மாா்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்த நிலையில், மத்திய அரசு 5-ம் கட்ட தளா்வுகளைக் கடந்த மாதம் அறிவித்தது. அப்போது, சமூக இடைவெளியைப் பின்பற்றி 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கியது.

இதன் காரணமாக, புதுவையிலும் திரையரங்குகளைத் திறக்க புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் அனுமதி வழங்கினாா்.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது இயக்கப்படும் இரு திரையரங்குகளில் ஒருநாளைக்கு மூன்று காட்சிகளைத் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பார்வையாளர்கள் திரையரங்கினுள் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் அவர்களுக்கு முகக்கவசமும் சானிடைசரும் வழங்கப்பட்டுள்ளன. 

நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கம் திறக்கப்படுவதால், புதுச்சேரி திருவள்ளூவா் சாலையில் உள்ள ஒரு திரையரங்கம் பொதுமக்களைக் கவரும் வகையில், டிக்கெட் மற்றும் வாகன நிறுத்தக் கட்டணத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ. 120 டிக்கெட் ரூ. 100 ஆகவும், ரூ. 100 டிக்கெட் ரூ. 75 ஆகவும், நான்கு சக்கர வாகனத்துக்கான நிறுத்த (பாா்க்கிங்) கட்டணம் ரூ. 50-ல் இருந்து ரூ. 30 ஆகவும், இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 20-ல் இருந்து ரூ. 10 ஆகவும் குறைத்துள்ளது.

எனினும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்குகள் இன்று திறக்கப்படவில்லை. இதற்கான காரணமாகத் திரையரங்குகளின் உரிமையாளர்கள் கூறியதாவது:

புதிய படங்கள் வெளியாகாததால் திரையரங்குகளை உடனடியாகத் திறக்க முடியவில்லை. ஒரு மாலில் நாளை முதல் இரு திரையரங்குகளைத் திறக்க முடிவெடுத்துள்ளார்கள். மேலும் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்படாததால் இங்கும் திரையரங்குகளைத் திறக்கப் பலரும் ஆர்வம் காண்பிக்கவில்லை. 

மேலும் நாட்டிலேயே புதுச்சேரியில் தான் அதிகளவில் ஜிஎஸ்டியுடன் 25% கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக மேலும் சில வரிகள் செலுத்தவேண்டும் என்பதால் இவையெல்லாம் திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கூடுதல் சுமையாக உள்ளன. கேளிக்கை வரியை நீக்கவேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஏராளமான கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை இயக்கவேண்டும் என்பது சிரமமாக உள்ளது. ஒரு வெள்ளோட்டமாக சில திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அதன் நிலவரத்தைப் பார்த்த பிறகு இதர திரையரங்குகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com