எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்: முதல்வர் பழனிசாமியிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறக்கக் கோரி தமிழக முதல்வர் பழனிசாமியிடம்...
எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்: முதல்வர் பழனிசாமியிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறக்கக் கோரி தமிழக முதல்வர் பழனிசாமியிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்கள்.

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக, மாா்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. திரையரங்குகளை அக். 15-ஆம் தேதி முதல் திறக்க மத்திய அரசு தனது ஐந்தாவது பொது முடக்கத் தளா்வில் அனுமதி அளித்திருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. 

தமிழகம் முழுவதும் திரையரங்குகளைத் திறப்பது தொடா்பாக அரசு ஆலோசித்து வருகிறது. தற்போதைய சூழலில் திரையரங்குகள் திறக்கப்பட்டால், கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், திரையரங்குகளைத் திறப்பதற்கு இன்னும் சில காலமாகும் எனத் தெரிகிறது. 

இந்நிலையில் திரையரங்குகளைத் திறக்கக் கோரி தமிழக முதல்வர் பழனிசாமியிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்கள். அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வரை இன்று சந்தித்தார்கள். முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தாயாா் தவுசாயம்மாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பசுமை வழிச் சாலையிலுள்ள முதல்வா் இல்லத்துக்கு சென்ற திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வரின் தாயாா் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி முதல்வருக்கு ஆறுதல் கூறினாா்கள். பிறகு திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தினார்கள். 

செய்தியாளர்களிடம் ரோகிணி பன்னீர்செல்வம் பேசியதாவது:

திரையரங்குகளைத் திறக்காததால் எங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளைத் திறந்து எங்களுக்கு வாழ்வு கொடுக்கவேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை தெரிவித்துள்ளோம். திரையரங்குகளைத் திறப்பதற்கான தேதியை விரைவில் அறிவிப்பதாக முதல்வர் கூறியுள்ளார் என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com