கணவர் பீட்டர் பாலைப் பிரிகிறாரா?: நீண்ட விளக்கம் அளித்துள்ள வனிதா விஜயகுமார்

என் குழந்தைகளையும் என்னைச் சுற்றி இருப்பவர்களையும் மனத்திக் கொண்டு சரியான முடிவை எடுப்பேன்.
கணவர் பீட்டர் பாலைப் பிரிகிறாரா?: நீண்ட விளக்கம் அளித்துள்ள வனிதா விஜயகுமார்

கணவர் பீட்டர் பாலைப் பிரிகிறார் என்று வெளியான செய்திகளுக்கு நடிகை வனிதா விஜயகுமார் பதில் அளித்துள்ளார்.

திரைப்பட நடிகை வனிதா, சென்னை அருகே போரூா் அய்யப்பன்தாங்கலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில் வனிதா, கடந்த ஜூன் 27-ஆம் தேதி பீட்டா் பால் என்பவரை 3-ஆவதாக திருமணம் செய்து கொண்டாா். அவரது மனைவி, தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடனே புகாா் அளித்தாா்.  வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும் பேட்டிகளில் ஒருவரையொருவர் விமரிசித்துக்கொண்டார்கள். வனிதா விஜயகுமாரின் திருமணம் தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்ற திரையுலகினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் வனிதாவின் நடவடிக்கைகளைப் பலரும் விமரிசித்துள்ளார்கள். 

இந்நிலையில் கணவர் பீட்டர் பாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அவரை வனிதா விஜயகுமார் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார் வனிதா விஜயகுமார். அவர் கூறியதாவது:

நான் ஒரு வீட்டை உடைத்துவிட்டதாக எண்ணுபவர்களுக்கு - பல வருடங்களாகக் குடும்பம், வீடில்லாத ஒருவருடன் சேர்ந்து ஒரு வீட்டை உருவாக்கியுள்ளேன். நானும் அவரும் வேதனையில் இருந்தோம். கடினமான காலக்கட்டங்களில், கரோனா தொடங்கிய காலம் முதல் எங்களைச் சுற்றி வேண்டுமென்றே நடத்தப்பட்ட ஊடக விளையாட்டு வரை இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து, சிரித்து அவற்றைக் கடந்து வந்தோம். எதுவும் எங்களை வீழ்த்தாது என நம்பினேன். அதன்பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஒரு மாதத்துக்குள் அவரை இழந்துவிடுவேன் என இருமுறை பயந்தேன் . அவரை இருமுறை உயிருடன் மீட்டுக்கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி. 

இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் விரும்புவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போது வாழ்க்கை மாறிவிடுகிறது. அவரைக் கவனித்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு. அவரை இழக்கும் வலியைத் தாங்கும் சக்தி என்னிடம் இல்லை. இன்றும்கூட அதே வலியுடன் தான் உள்ளேன். 

சில வக்கிர மனம் படைத்தவர்கள் என் வாழ்க்கையை வைத்து பணமும் புகழும் சம்பாதிக்கிறார்கள். என் இதயத்தை உடைக்கிறார்கள். இரு தனிபட்ட நபர்களின் வாழ்க்கை குறித்து கேலியாக விவாதிக்கிறார்கள். மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள்.

என் வாழ்க்கையின் அனைத்து நல்லது கெட்டதையும் அனைவரிடமும் பகிர்கிறேன். நான் எதையும் மறைப்பதில்லை.

இப்போது பெரிய சவாலைச் சந்தித்துள்ளேன். அதைச் சரி செய்ய என்னாலான முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். என் வேலையை, என் குழந்தைகளைத் தொந்தரவு செய்யாமல் இந்தச் சவாலை எதிர்கொள்ளும் துணிச்சலில் இருக்கிறேன். 

என் வாழ்க்கை தொடர் போராட்டமாக உள்ளது. காதலில் தோற்பது எனக்குப் பழகிவிட்டது. காதலிப்பதும் அதில் ஏமாற்றமடைவதும் துன்பகரமானது. போலியான செய்திகளைப் படித்து எந்த முடிவுக்கும் வரவேண்டாம். என் வாழ்க்கையில் எனக்கு இருந்த அனைத்து கனவுகளும் நம்பிக்கைகளும் உடைகிற சூழலில் உள்ளேன். எனக்கு இது அச்சத்தைத் தருகிறது. 

யாரும் எதையும் யூகிக்கவேண்டாம். அது என்னை மிகவும் வேதனைக்கு ஆளாக்குகிறது. நான் முதிர்ச்சியடைந்தவள். என் துணை மீது பழிபோடும் பழக்கம் எனக்கில்லை. என் குழந்தைகளையும் என்னைச் சுற்றி இருப்பவர்களையும் மனத்திக் கொண்டு சரியான முடிவை எடுப்பேன். 

ஓர் அதிசயம் நடக்கும் என நம்புகிறேன். பிரார்த்தனை செய்கிறேன். அது நடக்கவில்லை என்றால் அந்தச் சூழலை எதிர்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com