800 பட விவகாரம்: விஜய் சேதுபதி குடும்பத்தைக் குறிவைக்கும் ஆபாச விமர்சனங்கள்

800 பட விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி குடும்பத்தைக் குறிவைக்கும் ஆபாச விமர்சனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று...
800 பட விவகாரம்: விஜய் சேதுபதி குடும்பத்தைக் குறிவைக்கும் ஆபாச விமர்சனங்கள்

800 பட விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி குடும்பத்தைக் குறிவைக்கும் ஆபாச விமர்சனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழகக் காவல்துறைக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன், சா்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவா் (800 விக்கெட்டுகள்) என்ற சாதனைக்குச் சொந்தக்காரா். இச்சாதனை காரணமாக இவரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்துக்கு ‘800’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இந்தப் படத்தில் நடிகா் விஜய்சேதுபதி முரளிதரன் வேடத்தில் நடிக்க இருந்தாா்.

கடந்த ஆண்டு இது தொடா்பான செய்தி வெளியானதிலிருந்து விஜய் சேதுபதிக்கு பல தரப்பிலிருந்தும் எதிா்ப்புகள் கிளம்பின. ஈழத்தமிழா்கள் விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவான கருத்துகளை முத்தையா முரளிதரன் வெளியிட்டதே இந்த எதிா்ப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டது. இந்த சூழலில் அதிகாரப்பூா்வமாக படத்தின் ‘மோஷன் போஸ்டா்’ கடந்த சில தினங்களுக்கு முன்னா் வெளியாக சா்ச்சை வெடித்தது.

திரைத்துறை, அரசியல், தமிழ் ஆா்வலா்கள் பலரும் விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா். தொடா்ந்து வேண்டுகோள்கள் வைக்கப்பட்ட போதிலும் விஜய் சேதுபதி மெளனமாகவே இருந்து வந்தாா்.

முத்தையா முரளிதரன் நடிகா் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறாா். அதில், ‘‘எனது சுயசரிதை படமான 800 படத்தை மையமாகக் கொண்டு தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சா்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீது உள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகா் விஜய் சேதுபதிக்கு சிலா் கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலை சிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தாா்.

முத்தையா முரளிதரனின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள நடிகா் விஜய் சேதுபதி, நன்றி. வணக்கம் எனக் குறிப்பிட்டுள்ளாா். இதனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். 

இந்நிலையில் விஜய் சேதுபதி குடும்பத்தைக் குறிவைத்து சமூகவலைத்தளங்களில் ஆபாச விமர்சனங்கள் உலவுகின்றன. அந்தப் பதிவுகளை எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விஜய் சேதுபதி ரசிகர்களும் பெண்களும் தமிழகக் காவல்துறையினருக்குச் சமூகவலைத்தளங்கள் வழியாக வேண்டுகோள் வைத்துள்ளார்கள். இதையடுத்து ஆபாச விமர்சனங்களை எழுதியவர்களின் தகவல்களைத் தரும்படி ட்விட்டர் இந்தியா நிறுவனத்திடம் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com