நாங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை: பாரதிராஜாவின் கருத்துக்கு திரையரங்கு உரிமையாளர் பதில்

இன்றைய ரியல் எஸ்டேட் மதிப்பில் ஒரு தனி திரையரங்கு என்பது பெரிய சொத்தாகும்.
நாங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை: பாரதிராஜாவின் கருத்துக்கு திரையரங்கு உரிமையாளர் பதில்

ஒரு படத்தை யாருக்கு விற்க வேண்டும் என்பது தயாரிப்பாளரின் உரிமை என மூத்த இயக்குநர் பாரதிராஜா கூறியதற்கு சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கத்தின் உரிமையாளர் பதில் அளித்துள்ளார்.

மூத்த இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க அலுவலகம் சென்னையில் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பாரதிராஜா பேசியதாவது: 

கரோனாவால் நிறுத்தப்பட்ட படங்களின் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்கவேண்டும். அதன்பிறகு புதிய படத்தைத் தொடங்குங்கள் என தயாரிப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

முன்பு நிறைய விநியோகஸ்தர்கள் இருந்தார்கள். அப்போது பிரச்னையில்லாமல் இருந்தது. இப்போது விநியோகஸ்தர்களே இல்லை. இப்போது நேரடியாகத் திரையரங்குகளுக்குப் படங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. இதில் கிடைக்கும் பலன்களில் பெரும்பாலானவைத் திரையரங்குகளுக்கே செல்கின்றன. இதற்காக அறிக்கை கொடுத்துள்ளோம். பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில் சுதந்திரம் எங்களுக்கு உண்டு. என் பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன். இன்னாருக்குத்தான் விநியோகம் செய்யவேண்டும் என யாரும் கூற முடியாது. எனெனில் அது என் பொருள். நீங்கள் வாங்கவில்லையென்றால் எப்படி விற்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.

திரையரங்கை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அது அவர்கள் பொருள். எங்கள் படங்களால் தான் திரையரங்கம் புகழ் பெறுகிறது. எங்கள் படத்தைப் பார்க்கத்தான் திரையரங்குக்கு மக்கள் வருகிறார்கள். திரையரங்குகள் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் நாங்கள் வெளியே செல்ல மாட்டோம். நடிகர்களுக்குக் கோடிக்கணக்கில் சம்பளம் தருவது தயாரிப்பாளரின் உரிமை. அதை மற்றவர்கள் கேள்வி கேட்க உரிமையில்லை. கரோனா முடிந்த பிறகு சிறிய படங்களை வெளியிடத் திரையரங்குகள் தயாராக உள்ளதா என்று பேட்டியளித்துள்ளார். 

பாரதிராஜாவின் இந்தக் கருத்துக்கு சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கத்தின் உரிமையாளர் ராகேஷ் கெளதமன் பதில் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

தயாரிப்பாளருக்கு ஒரு படம் அவர்களுடைய பொருள் என்றால் திரையரங்கும் எங்களுடைய பொருளாகும். எனவே நிபந்தனைகள் எல்லாம் பேசித்தான் முடிவு செய்ய முடியும். ஓடிடிக்கும் இதே தான். எனவே ஒரு தரப்பு மட்டும் நிபந்தனைகளை விதிக்க முடியாது.

உங்களுக்கு நல்ல தொகையை ஓடிடி கொடுக்கிறார்கள் என்றால் ஏன் தாமதிக்கிறீர்கள், தொடர்ந்து அவர்களிடம் செல்ல வேண்டியதுதானே! அவர்களிடம் உங்கள் பொருளை விற்று அதிக லாபத்தைப் பாருங்கள். 

ஓடிடி தான் எதிர்காலம் என்றால் அப்படியே இருக்கட்டும்.

திரையரங்குகளின் காலம் முடிந்துவிட்டது என்றால் அப்படியே இருக்கட்டும்.

இன்றைய ரியல் எஸ்டேட் மதிப்பில் ஒரு தனி திரையரங்கு என்பது பெரிய சொத்தாகும். இதனை வணிக வளாகமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. 

அனைத்துக்கும் ஒரு முடிவு. நாங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com