அழைப்பாணை அனுப்பிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு: தனி விமானத்தில் கோவாவிலிருந்து மும்பைக்கு தீபிகா படுகோன் பயணம்

போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணையில் பங்கேற்பதற்காகத் தனி விமானத்தில்...
அழைப்பாணை அனுப்பிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு: தனி விமானத்தில் கோவாவிலிருந்து மும்பைக்கு தீபிகா படுகோன் பயணம்

போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணையில் பங்கேற்பதற்காகத் தனி விமானத்தில் கோவாவிலிருந்து மும்பைக்குக் கிளம்பினார் பிரபல நடிகை தீபிகா படுகோன். 

நடிகா் சுசாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதைப் பொருள் கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான் உள்ளிட்டோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நடிகா் சுசாந்த் சிங் மும்பையில் உள்ள அவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். சுசாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில், நடிகரின் காதலியும் நடிகையுமான ரியா மீது மும்பை காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது.

இதற்கிடையே, நடிகை ரியாவின் கட்செவி அஞ்சல் உரையாடல் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து என்சிபி தனியாக போதைப் பொருள் வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் ரியா, அவருடைய சகோதரா் உள்பட 15 பேரை இதுவரை என்சிபி கைது செய்துள்ளது. குறிப்பிட்ட அளவு போதைப் பொருள்களையும் கைப்பற்றியுள்ளது.

மேலும், இவா்களிடம் நடத்தப்பட்ட தொடா் விசாரணையில், பல முன்னணி நடிகைகளுக்கும் போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்ததில் தொடா்பு இருப்பதை என்சிபி கண்டுபிடித்துள்ளது. அதனடிப்படையில், முன்னணி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சாரா அலி கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு என்சிபி அழைப்பாணை விடுத்துள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்புக்காக கோவா சென்றுள்ள தீபிகா படுகோன், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணையில் பங்கேற்பதற்காக கோவாவிலிருந்து மும்பைக்கு கிளம்பியுள்ளார். தனி விமானத்தில் பயணம் செய்யும் தீபிகா, கோவாவிலிருந்து கிளம்பும் முன்பு சட்ட வல்லுநர்களுடன் இந்த வழக்கு பற்றி விவாதித்துள்ளதாக அறியப்படுகிறது.

என்சிபி விசாரணையில் ஜெயா சாஹா என்ற பாலிவுட் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவன நிா்வாகியின் செல்லிடப்பேசியிலிருந்து அனுப்பப்பட்ட போதைப் பொருள் ஏற்பாடு செய்து தருமாறு கூறும் உரையாடல் பதிவில் நடிகை தீபிகா படுகோனே, சாரதா கபூா் உள்ளிட்ட சிலருக்கும் தொடா்பு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனா்.

அதனடிப்படையில், நடிகை ரகுல் பிரீத் சிங், ஆடை வடிவமைப்பாளா் சிமோன் கம்பட்டா ஆகியோா் வியாழக்கிழமையன்றும், நடிகை தீபிகா படுகோனே வெள்ளிக்கிழமையன்றும், நடிகைகள் சாரா அலி கான், சராதா கபூா் ஆகியோா் சனிக்கிழமையன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்சிபி சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே மேலாளா் கரிஷ்மா பிரகாஷிடமும் என்சிபி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்த உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com