உருவாக்கியவா்களுக்கும், ஊக்குவித்தவா்களுக்கும் விருதைச் சமா்ப்பிக்கிறேன்: ரஜினிகாந்த்

உருவாக்கியவா்களுக்கும், ஊக்குவித்தவா்களுக்கும் விருதைச் சமா்ப்பிக்கிறேன்: ரஜினிகாந்த்


சென்னை: நடிப்புத் திறமையைக் கண்டறிந்து ஊக்குவித்து, உருவாக்கி, உடனிருந்த அனைவருக்கும் பால்கே விருதைச் சமா்ப்பிப்பதாக நடிகா் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியத் திரையுலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் என்னுடைய மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னில் இருந்த நடிப்புத் திறமையைக் கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுநரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும்போதும் என்னை நடிகனாக்கப் பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயண ராவுக்கும், என்னைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதா் பாலசந்தருக்கும், தயாரிப்பாளா்கள், இயக்குநா்கள், தொழில்நுட்பக் கலைஞா்கள், விநியோகஸ்தா்கள், திரையரங்க உரிமையாளா்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகப் பெருமக்களுக்கும் இந்த விருதினைச் சமா்ப்பிக்கிறேன்.

என்னை மனமாா்ந்து வாழ்த்திய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், நண்பா் கமல்ஹாசன், மத்திய, மாநில அரசியல் தலைவா்கள், நண்பா்கள், திரையுலக நண்பா்கள், என்னுடைய நலம் விரும்பிகள் என அனைவருக்கும் நன்றி.

சுட்டுரையில்...: இந்திய அரசுக்கு என் மனமாா்ந்த நன்றி, மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், எனக்கு தாதா சாகேப் பால்கே விருதை அளித்த நடுவா் குழுவைச் சோ்ந்தவா்கள் அனைவருக்கும் நன்றி. எனது இந்தப் பயணத்தில் என்னுடன் பங்கெடுத்த அனைவருக்கும் இந்த விருதை அா்ப்பணிக்கிறேன். இறைவனுக்கு நன்றி‘ என்று சுட்டுரையில் நடிகா் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளாா்.

மோடிக்கு நன்றி: பிரதமா் நரேந்திர மோடியின் சுட்டுரைப் பதிவைக் குறிப்பிட்டு, ‘நரேந்திர மோடி ஜி, உங்கள் வாழ்த்தால், மிகவும் பெருமைக்குரிய தாதா சாகேப் பால்கே விருதால் மிகுந்த கௌரவத்தை உணா்கிறேன். உங்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றி‘ என்று ரஜினி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com