நடிகர் யோகி பாபு மீது முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் புகார் (விடியோ)

பின்புற வாசலில் முடி திருத்தும் தொழிலாளியை வரச் சொல்வதும் குழந்தைகளிடம் பூச்சாண்டி என்று...
நடிகர் யோகி பாபு மீது முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் புகார் (விடியோ)

நடிகர் யோகி பாபு மீது தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்கள்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள மண்டேலா படம் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஷஷிகாந்த் இப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மண்டேலா படத்துக்கு எதிராக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்கள். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 

யோகி பாபு நடித்த மண்டேலா படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களைப் புண்படுத்தும் காட்சிகள் உள்ளன. எனவே இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர், நடிகர் யோகி பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதன்பிறகு செய்தியாளர்களிடம் மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் கூறியதாவது:

எங்கள் மருத்துவர் சமுதாய மக்கள் தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளார்கள். யோகி பாபு நடித்த மண்டேலா படம் மருத்துவர் சமுதாயத்தையும் முடி திருத்தும் தொழிலாளர்களையும் இழிவுபடுத்தியுள்ளது. படம் முழுக்க முடி திருத்தும் தொழிலாளர்களை எந்தளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ அந்தளவுக்கு இழிவுபடுத்தியுள்ளார்கள். காரில் ஏற்றாமல் அலைக்கழிப்பதும் பின்புற வாசலில் முடி திருத்தும் தொழிலாளியை வரச் சொல்வதும் குழந்தைகளிடம் பூச்சாண்டி என்று கூறுவதும் என எங்களை நாகரிகமற்ற முறையில் இழிவுபடுத்தியுள்ளார்கள். இதனால் அனைவரும் மனவேதனை அடைந்துள்ளார்கள். இதனால் மண்டேலா படத்தைத் தடை செய்ய வேண்டும், யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினரும் விஜய் தொலைக்காட்சியும் எங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். படத்துக்குத் தடை விதிக்கவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனக் கூறினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com