அந்நியன் படக் கதையின் உரிமை என்னிடமே உள்ளது: ஷங்கருக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ்!

 பாய்ஸ் படம் பெரிய அளவில் வெற்றி பெறாதபோது உங்களுடைய பெயரைக் காப்பாற்ற வேண்டிய அழுத்தத்தில் இருந்தீர்கள்.
அந்நியன் படக் கதையின் உரிமை என்னிடமே உள்ளது: ஷங்கருக்கு  ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ்!

விக்ரம், சதா நடிப்பில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படம் 2005-ல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

அந்நியன் படத்தை ஹிந்தியில் இயக்கவுள்ளார் ஷங்கர். ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகும் இப்படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. ஜெயந்திலால் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இதையடுத்து அந்நியன் படத்தைத் தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஷங்கருக்கு எழுதிய கடிதத்தில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எழுதியதாவது:

அந்நியன் படத்தின் கதையைத் தழுவி ஹிந்தியில் நீங்கள் இயக்கும் படம் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் நான் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்நியன் படத்தின் கதை உரிமையை மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து நான் பெற்றிருந்தேன். இதற்காக அவருக்கு முழுத்தொகையும் அளிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் உள்ளன. கதைக்கான முழு உரிமை என்னிடமே உண்டு. எனவே என்னுடைய அனுமதியின்றி கதையை ரீமேக் செய்வதோ தழுவி படம் எடுப்பதோ சட்டவிரோதமாகும்.

நீங்கள் இயக்கிய பாய்ஸ் படம் பெரிய அளவில் வெற்றி பெறாதபோது உங்களுடைய பெயரைக் காப்பாற்ற வேண்டிய அழுத்தத்தில் இருந்தீர்கள். அந்தச் சமயத்தில் அந்நியன் படத்தை இயக்க உங்களுக்கு நான் வாய்ப்பளித்தேன். அதற்குப் பிறகு என்னுடைய ஆதரவினால் இழந்த பெயரை மீட்டெடுத்தீர்கள். இதையெல்லாம் நீங்கள் மறந்து, என்னிடம் தகவல் தெரிவிக்காமல் வெற்றிப் படமான அந்நியன் படத்தை ரீமேக் செய்வதன் மூலம் அதன் புகழை அறுவடை செய்ய எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது. நீங்கள் எப்போதும் சில தொழில்தர்மங்களைக் கடைப்பிடிப்பவர். அப்படியிருந்தும் இதுபோன்று சட்டவிரோதச் செயலினால் எப்படி கீழ்நிலைக்கு இறங்க முடியும் என ஆச்சர்யம் கொள்கிறேன். 

எனவே என்னிடம் காப்புரிமை உள்ள அந்நியன் கதையை நகல் எடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் கடிதத்துடன் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com