கடைசி செய்தியாளர் சந்திப்பிலும் சமூக அக்கறையை வெளிப்படுத்திய நடிகர் விவேக்

அரசு மருத்துவமனைக்கு வந்தது ஏன் என்கிற கேள்வி என்னிடம் கேட்கப்படும்.
கடைசி செய்தியாளர் சந்திப்பிலும் சமூக அக்கறையை வெளிப்படுத்திய நடிகர் விவேக்

மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

இறப்பதற்கு இரு நாள்களுக்கு முன்பு நடிகர் விவேக், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். 

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் விவேக் கூறியதாவது:

தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதது ஏன், அரசு மருத்துவமனைக்கு வந்தது ஏன் என்கிற கேள்வி என்னிடம் கேட்கப்படும். அரசு மருத்துவமனைதான் பெரும்பாலான மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் மருத்துவச் சேவை செய்து வருகிறது. தடுப்பூசி குறித்து பலருக்கும் கேள்விகள் உள்ளன. அதுதொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இதைச் செலுத்திக்கொண்டால் எந்தவித ஆபத்தும் கிடையாது, ஆனால் நமக்குப் பாதுகாப்பு உண்டு என்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். தடுப்பூசி போட்டுக்கொண்டால் கரோனா வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. காப்பீடு எடுத்துக்கொண்டேன், ஆனால் என் பைக்குக்கு விபத்தே நேராது எனச் சொல்ல முடியுமா? காப்பீடு எடுத்தாலும் பைக்கைச் சரியாக ஓட்ட வேண்டும். எனவே தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் சமூகப் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் இருக்கவேண்டும் என்றார். 

கடைசியாக, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து பேசியிருக்கிறார் விவேக். தனது வாழ்நாளின் கடைசி தருணங்களிலும் சமூக அக்கறையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com