இந்தியன் 2 படப் பிரச்னையைப் பேசித் தீர்க்க முடியவில்லை: இயக்குநர் ஷங்கர்

இந்தியன் 2 படப் பிரச்னையைப் பேசித் தீர்க்க முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படப் பிரச்னையைப் பேசித் தீர்க்க முடியவில்லை: இயக்குநர் ஷங்கர்

இந்தியன் 2 படப் பிரச்னையைப் பேசித் தீர்க்க முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். 

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வருடம் பிப்ரவரி 19-ஆம் தேதி இப்படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரத்தைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சொ.சந்திரன், சி.மது ஆகியோா் உயிரிழந்தனா். மேலும் 13 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸாா் உடனடியாக கைது செய்தனா். கமல், ஷங்கரிடம் விசாரணை நடைபெற்றது. இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக ரூ. 1 கோடி அளிப்பதாக கமல் ஹாசன் அறிவித்தார். ஷங்கர் ரூ. 1 கோடி மற்றும் லைகா நிறுவனம் ரூ. 2 கோடி வழங்குவதாக அறிவித்தார்கள். 

ஷங்கரின் புதிய படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அடுத்ததாக  இயக்குகிறார்  ஷங்கர். ராம் சரணின் 15-வது படம் இது. ஷங்கர் - ராம் சரண் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் எனத் தெரிகிறது. இதுதவிர அந்நியன் படத்தை ஹிந்தியில் இயக்கவுள்ளார் ஷங்கர். ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகும் இப்படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம்  தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். எங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க வேண்டும். இந்த  திரைப்படத்துக்கு ரூ. 150 கோடி  பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில்,  ரூ.236 கோடி  வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. இந்தியன் 2 படத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை முடித்து தர வேண்டும் என இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும். இயக்குநர் ஷங்கருக்கு ரூ. 40 கோடி  சம்பளம் பேசிய நிலையில் இதுவரை ரூ. 14 கோடி கொடுத்துள்ளோம். எஞ்சிய ரூ. 26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தத் தயாராக இருக்கிறோம் என மனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, அவர் பிற படங்களை இயக்கக் கூடாது என  இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார். 

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷங்கா் தரப்பில், ‘2022-ஆம் ஆண்டு மே மாதம் முதல் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்துக்கு ஷங்கா் ஒப்பந்தமாகியுள்ளாா். எனவே இந்தியன்-2 திரைப்படத்தை வரும் ஜூன் முதல் அக்டோபா் மாதம் வரையிலான 5 மாதங்களில் முடித்துக் கொடுத்து விடுவாா். லைகா நிறுவனம் ஷங்கருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது. அவற்றை திரும்பப் பெற வேண்டும். இந்தத் திரைப்படத்தில் நடித்து வந்து நடிகா் விவேக் திடீரென இறந்துவிட்டாா். அவா் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளது. இந்த விவரங்களை மறைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவு என்பது சுமுகத் தீா்வை ஏற்படுத்தாது. இருதரப்பும் கலந்து பேசி சுமுகத் தீா்வு காண வேண்டும்’ என அறிவுறுத்தி விசாரணையை வரும் ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

இந்நிலையில் இந்தியன் 2 படப் பிரச்னையைப் பேசித் தீர்க்க முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுக்க லைகா நிறுவனம் விரும்புகிறது. ஆனால் அக்டோபருக்குள் படத்தை முடித்துக்கொடுக்கத் தயார் என ஷங்கர் தரப்பு கூறியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com