டிடெக்டிவ் நேசமணியாக நடிக்கும் வடிவேலு ? : வைரலாகும் போஸ்டர்: தயாரிப்பாளர் விளக்கம்

டிடெக்டிவ் நேசமணி என்ற பெயரில் நடிகர் வடிவேலு நடிப்பதாக வெளியான புதிய பட போஸ்டர் குறித்து தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார். 
டிடெக்டிவ் நேசமணியாக நடிக்கும் வடிவேலு ? : வைரலாகும் போஸ்டர்: தயாரிப்பாளர் விளக்கம்

'டிடெக்டிவ் நேசமணி' என்ற பெயரில் நடிகர் வடிவேலு நடிப்பதாக வெளியான புதிய பட போஸ்டர் குறித்து தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார். 

தனது வித்தியாசமான உடல் மொழியின் வாயிலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் சிரிக்க வைக்கக் கூடிய வல்லமை படத்தைவர் நடிகர் வடிவேலு. அவரது நகைச்சுவை காட்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. 

நாய் சேகர், காண்டிராக்டர் நேசமணி, ஸ்நேக் பாபு, வண்டு முருகன், டெலக்ஸ் பாண்டியன், என்கவுண்டர் ஏகாம்பரம், அய்யாசாமி, பாடி சோடா, புல்லட் பாண்டி, செட்டப் செல்லப்பா, ஸ்டைல் பாண்டி, கைப்புள்ள என அவர் நடித்த கதாப்பாத்திரங்களின் பெயரைச் சொன்னாலே, அவரது தோற்றம் நினைவுக்கு வந்து சிரிப்பை வரவழைக்கும். 

நடிகர்கள் சூர்யா, விஜய் இணைந்து நடித்திருந்த  'பிரெண்ட்ஸ்' படத்தில் காண்டிராக்டர் நேசமணியாக நடித்திருப்பார் வடிவேலு. இந்த காமெடி இன்றளவும் பிரபலம்.

இந்தப் படத்தில் நடிகர் ரமேஷ் கண்ணா, வடிவேலுவின் தலையில் சுத்தியலை போட்டுவிடுவார். இந்தக் காட்சியை இரு வருடங்களுக்கு முன் ரசிகர் ஒருவர், தனது சுட்டுரைப் பக்கத்தில் சேவ் நேசமணி என்ற ஹேஷ்டேக் போட்டு பகிர, அது இந்திய அளவில் டிரெண்டானது. 

இதுகுறித்து நகைச்சுவையாக தமிழ் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். இது நகைச்சுவைக்காக என்று தெரியாத வட இந்தியர்கள், நேசமணி யார்?, உண்மையில் அவருக்கு என்ன ஆனது? என்று குழம்பினர். இப்படி நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் காலம் கடந்தும் நிற்கக் கூடியன. 

இந்த நிலையில் வடிவேலு நடிக்கும் 'டிடெக்டிவ் நேசமணி' என்ற படத்தின் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பதாகவும், இந்தப் படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் , நடிகர் வடிவேலுவை நீண்ட வருடங்களாக திரையில் காணாத ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. 

இந்த நிலையில் இந்தப் போஸ்டரை தனது சுட்டுரைப் பக்கத்தல் பகிர்ந்த தயாரிப்பாளர் சி.வி,குமார், ''பொய்யான செய்தியாக இருந்தாலும் நியாயம் வேணாமாப்பா, ஆனாலும் தலைவர் சூப்பர்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த போஸ்டரை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்பாளர்கள் வடிவேலுவை வைத்து படம் தயாரிக்க முன் வந்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com