இளையராஜா ஸ்டூடியோ திறப்பு: வெற்றிமாறன் படத்துக்கு முதலில் ஒலிப்பதிவு

புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கான இசைப்பணிகளைத் தொடங்கியுள்ளார் இளையராஜா.
படம் - twitter.com/idiamondbabu
படம் - twitter.com/idiamondbabu

புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கான இசைப்பணிகளைத் தொடங்கியுள்ளார் இளையராஜா.

40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வந்தது. அங்குதான் அவரின் இசைப் பயணம் நடந்து வந்தது. பிரசாத் ஸ்டுடியோ வளாகத்திலிருந்து இளையராஜா இடம் மாற வேண்டும் என்று ஸ்டுடியோ நிா்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடா்ந்து, பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகத்துக்கும், இளையராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது அறையில் இருந்து தான் எழுதிய இசைக் கோா்ப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், அங்கு ஒரு நாள் தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் ஆட்சேபம் தெரிவித்த பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம், பின்னா் சில நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்க சம்மதம் தெரிவித்தது. ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இளையராஜாவுடன் அவரது ஓா் உதவியாளா் மற்றும் இரண்டு இசை உதவியாளா்கள் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. தனது பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, தியானம் செய்துவிட்டு பிரசாத் ஸ்டுடியோவை இளையராஜா காலி செய்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், தனது அறையின் பூட்டு உடைக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தார் இளையராஜா. இதனால் பிரசாத் ஸ்டூடியோவுக்கு அவர் செல்லவில்லை. ஸ்டுடியோவைக் காலி செய்து 2 லாரிகளில் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. 

இந்நிலையில், சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கியுள்ளார் இளையராஜா. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ அமைந்துள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்துக்கான இசைப்பணிகளைத் தனது புதிய ஸ்டூடியோவில் தொடங்கியுள்ளார் இளையராஜா. ஸ்டூடியோவின் தொடக்க நாளன்று வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி போன்றோர் பங்கேற்றுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com