
பூவரசம் பீப்பி என்கிற படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், அடுத்ததாக சில்லுக் கருப்பட்டி என்கிற படத்தை இயக்கி அதிக கவனம் பெற்றார்.
ஹலிதா தற்போது இயக்கியுள்ள படம் - ஏலே. இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் 2019-ம் ஆண்டு மே 3 அன்று தொடங்கியது.
இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்கள். வால்வாட்சர் மற்றும் வொய்நாட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஏலே படத்தைத் தயாரித்துள்ளார்கள்.
சமுத்திரக்கனி, மணிகண்டன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - அருள்தேவ். பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியான 16 நாள்களில் ஓடிடியிலும் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதையடுத்து இனிமேல் சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியான 30 நாள்களுக்குப் பிறகும் பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியான 50 நாள்களுக்குப் பிறகும் தான் ஓடிடிடியில் வெளியாக வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கடிதம் அளிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்துள்ளார்கள்.
இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ஏலே படம் திரையரங்குகளில் வெளியாகாமல் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சில ஆச்சர்யமான புதிய விதிகளால் படத்தைத் திரையரங்குக்குக் கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏலே படம் பிப்ரவரி 28 அன்று ஞாயிறு பகல் 3 மணிக்கு நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது எனத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து ஏலே படம் நாளை (பிப். 28) விஜய் தொலைக்காட்சியில் பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
#AelayOnVijayTV திரையரங்குகளுக்கு முன்பே நம்ம விஜய் டிவில ஒளிபரப்பாகும் முதல் திரைப்படம்
— Vijay Television (@vijaytelevision) February 20, 2021
ஏலே - பிப்ரவரி 28 மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில #Aelay #WorldPremiere #Samuthirakani #Madhumathi #Manikandan #VijayTelevision pic.twitter.com/lz22x2u0Gi
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...