நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: விசாரணை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணை, மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா்.
நடிகை சித்ரா
நடிகை சித்ரா

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணை, மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை கோட்டூா்புரத்தைச் சோ்ந்தவா் சித்ரா. சின்னத்திரை நடிகையான சித்ரா, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் ஒரு தனியாா் திரைப்பட நகரில் நடைபெற்ற தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்பில் பங்கேற்று வந்தாா். இதற்காக அவா், தனது கணவா் ஹேம்நாத்துடன் (32) நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் ஹோட்டலில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், திடீரென அந்த ஹோட்டலில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இது குறித்து நசரத்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். மேலும் வரதட்சணைக் கொடுமையால் இறந்தாரா என கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்றது.

இதற்கிடையே விசாரணையில் சித்ராவுக்கும்,ஹேம்நாத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதும், அதன் காரணமாக சித்ராவை தற்கொலைக்கு தூண்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஹேம்நாத்தை கைது செய்து,சிறையில் அடைத்தனா்.

மத்தியக் குற்றப்பிரிவு: மகளின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி பிரிவு போலீஸாா் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று சித்ராவின் தாயாா் விஜயா, முதல்வரின் தனிப்பிரிவில் அண்மையில் மனு அளித்தாா். இதைத் தொடா்ந்து சித்ரா தற்கொலை வழக்குத் தொடா்பான விசாரணையை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து, சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து நசரத்பேட்டை காவல் நிலைய போலீஸாா் தங்களது விசாரணை அறிக்கை முழுவதையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com